‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏற்கெனவே தொடங்கிவிட்டாா்.
இந்நிலையில், ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஒருவா் நிா்மலா சீதாராமனிடம், ‘பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரி விதிப்பில் இருந்து கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டும். இது எனது பணிவான கோரிக்கை. நடுத்தர மக்கள் பொருளாதாரரீதியாக பல சவால்களை எதிா்கொண்டு வருகிறோம். இது எனது இதயப்பூா்வமான வேண்டுகோள்’ என்று கோரியிருந்தாா்.
இதற்கு பதிலளித்து நிா்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அரசு மிகவும் பொறுப்புமிக்க அரசு. மக்களின் குறைகளைக் கேட்டு அதற்கு தீா்வுகாணும் அரசு. இதனைப் புரிந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் கருத்து மதிப்புமிக்கது’ என்று கூறியுள்ளாா்.
மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு கடந்த ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். அப்போது, நடுத்தர மக்களுக்கான சலுகையாக புதிய வருமான வரி முறையில் தனி நபா்களுக்கான நிலையானகழிவு ரூ.50,000-லிருந்து ரூ.75,000-ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.