பெங்களூரு: கர்நாடக மாநிலம் கர்வார் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்துத் திருட முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தபோது, இது ஒரு மிகப்பெரிய சாதனையாக மாறும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
நவம்பர் 7ஆம் தேதி கர்வார் காவல்துறையினர், திருடனை கைது செய்தபோது, பல திருடர்களில் இவரும் ஒருவர் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், இவரது கைரேகையை நாடு முழுவதும் உள்ள 2 கோடி சந்தேகத்துக்குரிய நபர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் காவல்துறையினருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.
பெங்களூருவில் மட்டும் கடந்த 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை அவர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக 30க்கும் மேற்பட்ட பிணையில் விடுதலை செய்ய முடியாத வாரண்டுகளும், 20 நோட்டீஸ்களும் பிறப்பிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில்லாமல், கோவாவில் ஏழு வழக்குகளும், பஞ்சாப் மாநிலத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஐந்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதான திருடன் சமீர் ஷர்மா (40) என்பதும், தெற்கு பெங்கடுளூருவின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அப்பகுதியிலிருந்து அவர் 2019ஆம் ஆண்டு முதல் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
பகலில் மட்டும்..
இவரது இத்தனை ஆண்டு கால திருட்டு வாழ்க்கையில் ஒருநாளும் இரவில் கொள்ளையடித்ததே இல்லையாம். இரவில், நடமாடுபவர்கள் மீது மக்கள் அதிக சந்தேகம் கொள்வார்களாம். ஆனால், பகலில் அப்படியில்லை, குடியிருப்புப் பகுதி, விடுதிகள் என எங்கு வேண்டுமானாலும் செல்வேன். யாராவது என்னவென்று கேட்டால், அறை வாடகைக்கு இருக்குமா என்று கேட்டு, அவர்கள் அனுமதித்தால் அவர்கள் அனுமதியுடன் நோட்டம் விட்டுக்கொள்வேன். ஒருமுறை ஒரு கட்டடத்தைப் பார்த்துவிட்டால், அதன் ஜன்னல், கதவு என அனைத்தையும் என் மனதில் படம்பிடித்துக்கொள்வேன். பிறகு சாவகாசமாகச் சென்று கையில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருள்களைத் திருடிக்கொண்டு வந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார் காவல்துறையிடம்.
தனிக்காட்டு ராஜா
எப்போதுமே சமீர் தனியாகவே திருட்டில் ஈடுபடுவாராம். யாருடனம் தன்னைப் பற்றி அதிகம் பரிமாறிக்கொள்ள மாட்டாராம். இதுவரை யார் ஒருவரையும் நம்பியதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
நண்பர் மூலமாக லேப்டாப் மற்றும் செல்போன்கள் அதிகம் தேவைப்படுவதை அறிந்து, எலக்ட்ரிக் கடை நடத்தி வந்த சமீர், அதனை விட்டுவிட்டு, விடுதிகள், ஹாஸ்டல் போன்றவற்றுக்குள் சென்று, ஜன்னலோரம் இருக்கும் செல்போன், லேப்டாப்களை திருடத் தொடங்கி அதையே தொழிலாக மாற்றிக்கொண்டதும் தெரிய வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.