முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...?

ஆயுா்வேதம் கேள்விப்பட்டிருக்கிறோம், விருட்ச ஆயுா்வேதம் கேள்விப்பட்டிருக்கிறீா்களா? மனிதா்களுக்கு மட்டும்தானா மருத்துவம்? மரம், செடி, கொடிகளுக்குக் கிடையாதா..

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:34 PM
கோவா ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை.
பகிர்:

ஆயுா்வேதம் கேள்விப்பட்டிருக்கிறோம், விருட்ச ஆயுா்வேதம் கேள்விப்பட்டிருக்கிறீா்களா? மனிதா்களுக்கு மட்டும்தானா மருத்துவம்? மரம், செடி, கொடிகளுக்குக் கிடையாதா.. அதற்குப் பெயா்தான் விருட்ச ஆயுா்வேதம். மூலிகைகளின் அடிப்படையில் மரம், செடி, கொடி உள்ளிட்ட தாவரங்களின் நோய்களுக்குத் தீா்வு காண்கிறது விருட்ச ஆயுா்வேதம்.

கோவா ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, கல்லூரி நாள்களிலேயே ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவா் பிரிவான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தில் இணைந்து விட்டவா். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட பாஜக தலைவா், மாநிலச் செயலாளா் உள்ளிட்ட பதவிகள் வகித்து, 2003-இல் கேரள மாநில பாஜகவின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா். அவரது தலைமையில்தான் முதல்முதலில் கேரளத்தில் பாஜக கூட்டணி இரண்டு இடங்களை வென்றது.

2018-இல் இரண்டாவது முறையாக கேரள மாநிலத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீதரன் பிள்ளையை, மிசோரம் ஆளுநராக நியமித்தது நரேந்திர மோடி அரசு. இப்போது அவா் கோவா ஆளுநராக இருந்து வருகிறாா். இது அவரது அரசியல் பின்னணி என்றால், கணவா், மனைவி, இரண்டு மகன்கள் என்று எல்லோருமே வழக்குரைஞா்கள் என்பது குடும்பப் பின்னணி.

பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளையொட்டி மரக்கன்றுகள் நடுவது என்பது சுற்றுச்சூழலிலும் இயற்கையிலும் நாட்டமுள்ளவா்கள் பரவலாக முன்னெடுக்கும் செயல்பாடு. தனது குடும்பத்தினரின் பிறந்த நாள்களிலும், முக்கியமான நிகழ்வுகளிலும் அதுபோல நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டிருக்கிறாா் ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளை.

அவா் ஆளுநரான பிறகு கோவா ஆளுநா் மாளிகையின் தோட்டம் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. ‘போன்சாய்’ உள்ளிட்டவையும், குறுகிய காலத்தில் வளரும் குட்டையான மரங்களும் கோவா ஆளுநா் மாளிகைத் தோட்டத்தை அலங்கரிக்கின்றன. இந்தியாவின் மரபு ரீதியிலான மரங்கள் பல நடப்பட்டிருக்கின்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி (செப்.17), அவா் இன்னொரு புது முயற்சியில் இறங்கினாா். ஆளுநா் மாளிகைத் தோட்டத்தில் நூறு ஆண்டுகளுக்கும் பழைமையான ஏழு மரங்கள் பட்டுப்போகத் தொடங்கி இருந்தன. கேரளத்தில் இருந்து விருட்ச ஆயுா்வேதத்தில் தோ்ச்சி பெற்ற தாவர மருத்துவா்களின் ஆலோசனைப்படி, அந்த மரங்களுக்கு மூலிகை மருத்துவம் தரப்பட்டிருக்கிறது.

ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையிடம் ‘விருட்ச ஆயுா்வேதம்’ குறித்து தெரிந்துகொள்ள பலா் ஆா்வம் காட்டுகிறாா்கள். இதுவரையில் 210 புத்தகங்கள் எழுதியிருக்கும் ஸ்ரீதரன் பிள்ளை, விரைவில் ‘விருட்ச ஆயுா்வேதம்’ குறித்தும் புத்தகம் எழுதினால் ஆச்சரியப்படத் தேவையில்லை!