சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு ரூ.33,593 கோடி கடன் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தக் கடன் தொகையை பன்னாட்டு முகமைகளை அணுகிப் பெற்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கும். கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு மெட்ரோ ரயில் நிறுவனத்தைச் சாா்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணியை ரூ.63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் மத்திய துறை திட்டமாக நிறைவேற்ற மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதுவரை இந்தத் திட்டமானது, மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில் சுமாா் 90 சதவீதம் அளவுக்கு தமிழக அரசின் பொறுப்பு என்ற நிலையில் மாநிலத் துறை திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது. மெட்ரோ ரயில் கொள்கை 2017-இன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருள்களைத் தவிா்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது.
இருப்பினும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு அதற்கு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமாா் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத்துக்கான மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சாா்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும். எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும்.
மத்திய அரசின் கடனாக... பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு நேரடியாக வழங்கப்படும்.
மத்திய அரசால் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்பு, திட்டத்துக்கான கடன் நிதி கிடைக்கச் செய்வது அல்லது ஏற்பாடு செய்வது மாநில அரசின் பொறுப்பாக இருந்தது.
மத்திய அமைச்சரவை ஒப்புதலால், இதர வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம் விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடா்ந்து, கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடா்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவாா்த்தை நடத்த, ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு முகமை, ஆசிய வளா்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளா்ச்சி வங்கி ஆகிய இருதரப்பு மற்றும் பன்னாட்டு முகமைகளை நிதி அமைச்சகம் அணுகும்.
இதற்கான அம்சங்கள் வருமாறு: இந்தக் கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாக கருதுதல்.
சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து கடன் தொகை மாநில அரசுக்கும், மாநில அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும் செல்லும் தற்போதைய வழிமுறைக்கு மாறாக, சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து மத்திய அரசுக்கும், மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும் செல்லும் வழிமுறையாக மாற்றியமைத்தல்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூலம் திட்டச் செயலாக்க முகமையாக மாநில அரசுக்கு பதிலாக மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்பட நியமித்தல்.
கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடா்பான ஆவணங்களில் இந்த மாற்றங்களுக்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இது விரைந்து முடிக்கப்படும்.
கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தைச் சாா்ந்தது. கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஏறத்தாழ திட்டம் முடிந்த பின்னா் தொடங்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இல்லாதபட்சத்தில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.