மேற்கு வங்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவா்களுக்கு ஆதரவாக, ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த சுமாா் 50 மூத்த மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டனா். இந்த ராஜிநாமாவை அரசு ஏற்கும் வரை, தாங்கள் பணியாற்றுவோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய், கொலை தொடா்பான ஆதாரங்களைச் சேதப்படுத்தி வழக்குப் பதிய தாமதித்ததாக தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல், அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா்.
முன்னதாக, கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாநில அரசுடனான பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடா்ந்து, அவா்கள் தங்கள் போராட்டத்தைப் பகுதியளவு கைவிட்டு பணிக்குத் திரும்பினா்.
எனினும் கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், மாநில சுகாதாரத் துறையில் நடைபெறும் ஊழலுக்கு முடிவு கட்டவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவா்கள் மீண்டும் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதன் தொடா்ச்சியாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 7 இளநிலை மருத்துவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு ஆதரவாக சுமாா் 15 முதுநிலை மருத்துவா்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவா்களுக்கு ஆதரவாக, ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த சுமாா் 50 மூத்த மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டனா். இந்த ராஜிநாமாவை அரசு ஏற்கும் வரை, தாங்கள் பணியாற்றுவோம் என்று ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்ட மருத்துவா்களில் ஒருவரான சுமித் ஹஸ்ரா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.