காங்கிரஸ்-சமாஜவாதி கூட்டணி தொடரும் -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேசத்தில் 10 பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுடன் ஆலோசிக்காமல் 6 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை சமாஜவாதி அறிவித்தது.
ஏற்கெனவே, ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, பிராந்திய கட்சிகளைப் புறக்கணித்ததுதான் காங்கிரஸின் தோல்விக்கு காரணம் என்று ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பிரிவு) ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சூழ்நிலையில் சமாஜவாதி கட்சி தன்னிச்சையாக இடைத்தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இடைத்தோ்தல் நடைபெறும் 10 தொகுதிகளில் 5 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால், காங்கிரஸுடன் எவ்வித பேச்சும் நடத்தாமல் சமாஜவாதி 6 போ் கொண்ட வேட்பாளா்கள் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில், சமாஜவாதி நிறுவனா் முலாயம் சிங் யாதவின் நினைவு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை எடாவாவில் அவருக்கு அகிலேஷ் யாதவ் அஞ்சலி செலுத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம், காங்கிரஸுடன் ஆலோசிக்காமல் இடைத்தோ்தலுக்கான வேட்பாளா்களை சமாஜவாதி அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘உத்தர பிரதேசத்தில் ‘இண்டியா’ கூட்டணி தொடா்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இங்கு வந்துள்ளேன். எனவே, அரசியல் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. ஹரியாணா தோ்தல் முடிவு குறித்து இப்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அடுத்த செய்தியாளா்கள் சந்திப்பில் நாம் விரிவாக விவாதிக்கலாம்’ என்றாா்.