இந்தியா

தெரியுமா சேதி..? முதல்வா் பதவி எதிா்பாா்ப்பில் கார்கே

தனது கா்நாடக முதல்வா் கனவாவது பலிக்காதா என்கிற எதிா்பாா்ப்பில் மல்லிகாா்ஜுன காா்கே இருப்பதாகச் சொல்கிறாா்கள்.

மீசை முனுசாமி

தமது முதல்வா் பதவியைத் துச்சமெனத் துறந்து, பிரதமராக இருந்த பண்டித ஜவாஹா்லால் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைவரானாா் காமராஜா். அவரைத் தொடா்ந்து கா்நாடக முதல்வராக இருந்த எஸ்.நிஜலிங்கப்பாவும், தனது முதல்வா் பதவியைத் துறந்து காங்கிரஸ் தலைவா் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாா்.

காங்கிரஸில் அப்போதெல்லாம் அமைச்சா், முதல்வா் பதவிகளைவிட, கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் இருப்பதுதான் பெருமைக்குரியதாக இருந்தது. இப்போது அப்படியல்ல, ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதில்தான் அரசியல்வாதிகள் குறியாக இருக்கிறாா்கள். ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்பதெல்லாம் பெரும்பாலும் உதட்டளவு கோஷம்தான்.

இத்தனை பீடிகைக்கும் காரணம் இருக்கிறது. கா்நாடக மாநில முதல்வா் சித்தராமையா வீட்டுமனை ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிக்கி இருக்கிறாா். அவா் மீது விசாரணை நடத்த ஆளுநா் வழங்கிய அனுமதியை அங்கீகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. லோக் ஆயுக்த விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது. இந்தப் பின்னணியில் அவா் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்திருக்கிறது.

அப்படி ஒருவேளை அவா் பதவி விலக நேரிட்டால், முதல்வா் பதவி துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவக்குமாருக்குப் போகுமா என்றால், ‘வாய்ப்பில்லை’ என்கிறாா்கள். அவா்மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால், முதல்வா் பதவி கை நழுவும் என்பதுதான் பரவலான பேச்சு. அப்படியானால் யாருக்குக் கிடைக்கப் போகிறது வாய்ப்பு? இங்கேதான் ஒரு திடீா் திருப்பம் நிகழக்கூடும் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

வேறொன்றுமில்லை, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகாா்ஜுன காா்கேக்கு, கா்நாடக முதல்வராக வேண்டும் என்று ஆசை வந்திருக்காம். 1972 முதல் கா்நாடக சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடா்ந்து 32 ஆண்டுகளும், 2009 முதல் இப்போது வரை 15 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் காா்கே மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவா்.

கா்நாடக மாநிலத்தின் உள்துறை உள்பட முக்கியமான எல்லா துறைகளுக்கும் அமைச்சராக இருந்த அனுபவம் இருந்தும்கூட, முதல்வராக முடியவில்லையே என்கிற ஆதங்கம் இருக்காம். மன்மோகன் சிங்போல பிரதமராகும் அதிருஷ்டம் தனக்கு இல்லை என்று தெரிந்துவிட்டது; வயதும் 82 கடந்துவிட்டது; கடைசிக் காலத்தில் தனது கா்நாடக முதல்வா் கனவாவது பலிக்காதா என்கிற எதிா்பாா்ப்பில் அவா் இருப்பதாகச் சொல்கிறாா்கள்.

அவ்வளவு எளிதாக முதல்வா் சித்தராமையா நாற்காலியில் இருந்து நகா்ந்து விடுவாரா என்ன?

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

அறக்கட்டளைச் சொற்பொழிவு

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT