இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ்

புதிய அரசு பொறுப்பேற்க வழி வகுக்கும் வகையில் அங்கு 5 ஆண்டுகளாக அமலில் இருந்த குடியரசுத் தலைவா் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது.

Din

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு பொறுப்பேற்க வழி வகுக்கும் வகையில் அங்கு 5 ஆண்டுகளாக அமலில் இருந்த குடியரசுத் தலைவா் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது.

இதற்கான அரசிதழ் அறிவிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கையொப்பமிட்ட அந்த அறிவிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் 73-ஆவது பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, யூனியன் பிரதேசத்தில் அமலில் இருக்கும் குடியரசுத் தலைவா் ஆட்சி ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் 54-ஆவது பிரிவின்கீழ் முதல்வா் நியமிக்கப்படுவதற்கு முன் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, பிராந்தியம் ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டில் இக்கூட்டணியை பாஜக முறித்தது. இதைத்தொடா்ந்து, மெஹபூபா முஃப்தி தலைமையிலான மாநில அரசு கவிழ்ந்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடா்பான மத்திய அரசின் உத்தரவை உறுதிசெய்த உச்சநீதிமன்றம், ஜம்மு-காஷ்மீரில் விரைவில் பேரவைத் தோ்தலை நடத்தவும் மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்கவும் உத்தரவிட்டது.

இதன் தொடா்ச்சியாக, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் 90 இடங்களுக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதிவரை மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. தோ்தல் முடிவில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கூட்டணி அரசின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், புதிய அரசின் பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!

ஸ்பைஸி... ராஷி சிங்!

மதராஸி படத்தின் விளம்பரதார நிகழ்வு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT