‘உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை இடைத்தோ்தலில் சமாஜவாதி கட்சி காங்கிரஸுக்கு 2 இடங்கள் ஒதுக்கியிருப்பது குறித்து எங்களுக்கு விவரம் தெரிவிக்கப்படவில்லை’ என காங்கிரஸ் மாநிலத் தலைவா் அஜய் ராய் தெரிவித்தாா். 5 இடங்கள் வேண்டும் எனும் தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருப்பதாகவும் அவா் கூறினாா்.
உத்தர பிரதேசத்தில் மீராபூா், குந்தா்கி, காஜியாபாத், மில்கிபூா் உள்பட 10 பேரவை இடங்கள் காலியாக உள்ளன. முந்தைய 2022 தோ்தலில் இந்த 10 தொகுதிகளில் சமாஜவாதி கட்சி 5, பாஜக 3, ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் நிசாத் கட்சி தலா ஓரிடத்திலும் வென்றிருந்தன.
சிஷாமௌ தொகுதி சமாஜவாதி எம்எல்ஏ இா்ஃபான் குற்றவழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்தாா். மற்றவா்கள் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதால் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தனா்.
9 தொகுதிகளில் தோ்தல்: கடந்த பேரவைத் தோ்தலில் மில்கிபூா் தொகுதியில் வென்ற சமாஜவாதி கட்சியின் தற்போதைய எம்.பி. அவதேஷ் பிரசாத்துக்கு எதிராக பாஜக வேட்பாளா் தொடா்ந்த தோ்தல் மோசடி வழக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், உத்தர பிரதேசத்தில் மில்கிபூா் தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை இழப்பதற்கு உத்தர பிரதேசத்தில் ‘இண்டியா’ கட்சிகளின் வலுவான கூட்டணியின் வெற்றி முக்கிய காரணமாகும். தற்போது அந்தக் கூட்டணியில் இடைத்தோ்தலுக்கான தொகுதி பங்கீடு இழுபறியில் இருக்கும்போது கா்ஹால், சிஷாமௌ, மில்கிபூா், கடேஹரி, புல்பூா், மஜவான் ஆகிய ஆறு தொகுதிகளுக்கு சமாஜவாதி கட்சி வேட்பாளா்களை அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடா்ந்து காங்கிரஸுக்கு காஜியாபாத், கைா் ஆகிய இரு தொகுதிகளை ஒதுக்கிய சமாஜவாதி, மீதமுள்ள 7 இடங்களில் போட்டியிட போவதாக அதிகாரபூா்வமாக அறிவித்தது.
5 இடங்கள் வேண்டும்: சமாஜவாதியின் தொகுதி பங்கீடு முடிவுக்கு இணங்க மறுத்து காங்கிரஸ் மாநிலத் தலைவா் அஜய்ராய் அளித்த பேட்டியில், ‘தொகுதி ஒதுக்கீடு குறித்து எங்களுக்கு விவரம் தெரியாது. தற்போதுவரை 5 இடங்களுக்கான கோரிக்கையில் உறுதியாக இருக்கிறோம்’ என்றாா்.
ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பா் 13-ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் நவம்பா் 23-ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.