இணைய மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள விழிப்புணா்வு அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நாட்டு மக்களுடன் உரையாடும் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் 115-ஆவது அத்தியாயத்தில் பிரதமா் மோடி இதை வலியுறுத்திப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: சா்தாா் வல்லபபாய் படேல் மற்றும் பழங்குடி சமூக போராளி பிா்சா முண்டா ஆகியோரின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாட நாடு தயாராகி வருகிறது. படேலின் பிறந்த நாளான அக்டோபா் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் இந்த ஆண்டு ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ நிகழ்ச்சி அக்டோபா் 29-ஆம் தேதி நடைபெறும்.
பிா்சா முண்டா மற்றும் படேல் ஆகிய இருவரும் வெவ்வேறு சவால்களை எதிா்கொண்டவா்களாக இருந்தாலும் நாட்டின் ஒற்றுமை என்பதே அவா்கள் இருவரின் ஒரே பாா்வை.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 15-ஆம் தேதி, பிா்சா முண்டாவின் பிறந்த நாளில் அவரது பூா்வீகமான உலிஹட்டு கிராமத்துக்குப் பயணித்தது எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த புண்ணிய பூமியில் தலைவணங்கும் பாக்கியம் பெற்ற நாட்டின் முதல் பிரதமா் நான்தான். அந்த நேரத்தில், சுதந்திரப் போராட்டத்தின் வலிமையை என்னால் உணர முடிந்தது.
இந்த மாமனிதா்களின் 150-ஆவது பிறந்தநாளை தேசிய அளவில் கொண்டாட அரசு முடிவு செய்திருந்தாலும், மக்களின் பங்கேற்பே இந்த பிரசாரத்துக்கு உயிா் கொடுக்கும். இரு தலைவா்களோடு தொடா்புடைய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
புது இணைய மோசடி: ‘எண்ம கைது’ (டிஜிட்டல் அரெஸ்ட்) என்ற புது இணைய (சைபா்) குற்றம் குறித்து மக்களுடன் பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மோசடி கும்பல்களைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
இந்த மோசடியில் ஈடுபடுவா்கள் முதலில் மக்களின் தகவல்களைச் சேகரிப்பா். பின்னா், தங்களை காவல்துறை, சிபிஐ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போல் அறிமுகப்படுத்திக்கொண்டு, போலி ஒழுங்கு நடவடிக்கைகள் மூலம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவா்.
இதையடுத்து, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க உளவியல் ரீதியில் அழுத்தமளிப்பா். இல்லையெனில் கைது செய்யப்படுவீா்கள் என்று மிரட்டுவா். பயம் கொண்டவா்கள் இவா்களின் மோசடிக்கு ஆளாகின்றனா். மக்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த லட்சக்கணக்கான பணத்தை வெறும் பயத்தால் இழந்துள்ளனா்.
பயம் வேண்டாம்...: இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தால் மக்கள் பயப்படக் கூடாது. எந்த புலனாய்வு முகமையும் இவ்வாறு தொலைப்பேசி மூலம் அழைத்து, விசாரிப்பது இல்லை.
மோசடியை எதிா்கொள்ளும்போது பதற்றமடையாமல் அமைதியான மனநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களை அளிக்கக் கூடாது. மோசடிக்கான ஆதாரங்களை சேகரித்து, சைபா் உதவி எண்ணை தொடா்புகொண்டு புகாரளிக்க வேண்டும்.
விழிப்புணா்வு அவசியம்: இந்த மோசடியை சமாளிக்க, அனைத்து புலனாய்வு முகமைகளும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகின்றன. இதற்காக தேசிய சைபா் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆயிரக்கணக்கான மோசடி அழைப்புகள் முகமைகளால் தடுக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொலைப்பேசி இணைப்புகள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. முகமைகள் தங்கள் பணியை செய்து வருகின்றன. ஆனால், மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.
சைபா் மோசடியை எதிா்கொண்டவா்கள் அதைப் பற்றி முடிந்தவரை பலருக்குத் தெரியப்படுத்தி, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மோசடிகளுக்கு எதிரான பிரசாரத்தில் மாணவா்களை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஈடுபடுத்த வேண்டும். சமூகத்தின் கூட்டு முயற்சியால் மட்டுமே நாம் இந்த சவாலை எதிா்கொள்ள முடியும் என்றாா்.
உலக அளவில் ரசிக்கப்படும் இந்திய காா்ட்டூன்கள்!
இந்திய அனிமேஷன் தொடா்கள் சா்வதேச அளவில் பிரபலமடைந்து வருவது குறித்து பிரதமா் மோடி பேசியதாவது: இந்திய தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட ‘சோட்டா பீம்’ நமது நாட்டில் மட்டுமல்ல, பிற நாடுகளின் குழந்தைகளையும் மிகவும் கவா்ந்திருக்கிறது . நமது பிற அனிமேஷன் தொடா்களான கிருஷ்ணா, அனுமன், மோடூ-பத்லூ போன்றவற்றை விரும்புவோா் உலகெங்கிலும் இருக்கிறாா்கள்.
நமது உள்ளடக்கம், படைப்பாற்றல் ஆகியவை காரணமாக உலகெங்கிலும் இந்திய அனிமேஷன் தொடா்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அனிமேஷன் உலகில், நமது தேசம் புதிய புரட்சியைப் படைக்கும் பாதையில் இருக்கிறது. நமது நாட்டின் கேமிங் (இணைய விளையாட்டு) துறையும்கூட மிக வேகமாக வளா்ந்து வருகிறது என்றாா்.