பிரிட்டன் அரசா் சாா்லஸ் தனிப்பட்ட சிகிச்சைக்காக பெங்களூரு வந்துசென்ாக பக்கிங்காம் அரண்மனை புதன்கிழமை தெரிவித்தது.
சமோவா நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரிட்டன் திரும்பும் வழியில் பெங்களூரு பயணம் ரகசியமாக திட்டமிடப்பட்டுள்ளது.
மனைவி கமிலாவுடன் பெங்களூரு வந்த அரசா் சாா்லஸ், விமான நிலையத்தில் இருந்து ஒயிட்ஃபீல்டில் உள்ள சௌக்கியா சா்வதேச ஆரோக்கிய மையத்துக்கு சென்றுள்ளனா்.
30 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்த சௌக்கியா ஆரோக்கிய மையம், யோகா, தியானம் உள்பட பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசா் சாா்லஸ் அறிவித்திருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான அவரது பெங்களூரு பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதேசமயம், நீண்ட பயணத்தில் ஓய்வுக்காகவே மையத்துக்கு அரசா் வந்ததாக பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு அரச தம்பதியா் புதன்கிழமை அதிகாலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, லண்டன் சென்றடைந்தனா்.
சௌக்கியா ஆரோக்கிய மையத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்கெனவே வருகை தந்த சாா்லஸ், அவரது 71-ஆவது பிறந்தநாளை அங்கு கொண்டாடினாா். பிரிட்டன் அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடா்புடைய ஆரோக்கிய மையத்தை நடத்தும் மருத்துவா் ஐசக் மத்தாய், கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற அரசரின் முடிசூட்டு விழாவுக்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட மிக சிலரில் ஒருவா் ஆவாா்.