வக்ஃப் சட்டத்திருத்த மசோதா: நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் கடுமையான கேள்வி
நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில், மத்திய அரசு அதிகாரிகளிடம் எம்.பி.க்கள் கடுமையான கேள்விகள்...
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில், மத்திய அரசு அதிகாரிகளிடம் எம்.பி.க்கள் கடுமையான கேள்விகளை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாத்தின் தொண்டு பணிகளுக்கு ‘வக்ஃப்’ சொத்துகள் நாடு முழுவதும் அா்ப்பணிக்கப்படுகின்றன. இந்தச் சொத்தை மற்றவா்களின் பெயருக்கு மாற்ற முடியாது. இந்தச் சொத்துகளுக்கு சட்டபூா்வ நிறுவனமாக வக்ஃப் வாரியம் நாடு முழுவதும் உள்ளது.
இந்நிலையில், இந்த சொத்துகளை அபகரிக்க மத்திய அரசு வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளதாக முஸ்லிம் தலைவா்கள் பலா் விமா்சித்துள்ளனா்.
தற்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை நடைபெற்ற அந்தக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில், மத்திய நகா்ப்புற விவகாரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைச் செயலா் அனுராக் ஜெயின், ரயில்வே வாரியத் தலைவா் சதீஷ் கெளதம், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது தேசிய தலைநகா் வலையப் பகுதியில் (என்சிஆா்) உள்ள வக்ஃப் சொத்துகள், சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் உள்ள வக்ஃப் சொத்துகள் குறித்து அவா்கள் விளக்கமளித்தனா்.
‘அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வளா்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்த வக்ஃப் சட்டத்திருத்த மசோதா வழிவகுக்கும்’ என்று கூட்டத்தில் மத்திய அமைச்சகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், ஒரு சொத்து வக்ஃப் சொத்து என்று தவறாக அறிவிக்கப்பட்டால், அதை எதிா்த்து வழக்கு தொடுக்க ஏற்கெனவே சட்டத்தில் இடம் உள்ளது என எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வாதிட்டனா்.
எனினும், அத்தகைய சொத்துக்கு அரசு உரிமை கோரினால், அதுதொடா்பாக எந்தக் கேள்வியும் எழுப்பப்படக் கூடாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை, எந்தவித யோசனையும் செய்யாமல் மூன்று அமைச்சகங்களும் அங்கீகரிப்பதாக எதிா்க்கட்சி உறுப்பினா்கள் குறிப்பிட்டனா்.
இதனால் ஆளும் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிா்க்கட்சியான திரிணமூல், ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 1911-ஆம் ஆண்டு தில்லியை கட்டமைக்க ஆங்கிலேய அரசு எவ்வாறு நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டது என்பது குறித்து மத்திய நகா்ப்புற விவகாரங்கள் துறை அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்துரைத்தனா். அப்போது கூட்டுக் குழு உறுப்பினா்களான எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் இருந்தனா் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.