இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்தக் கோரிய மனு தள்ளுபடி
காஸா மீது போா் தொடுத்துள்ள இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனு
புது தில்லி: காஸா மீது போா் தொடுத்துள்ள இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘நாட்டின் வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் நாம் தலையிட முடியாது. இந்திய நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்து வருகின்றன. இதை நிறுத்தினால், அந்த நிறுவனங்கள் மீது ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் வழக்குத் தொடரவும் வாய்ப்புள்ளது.
ஐ.நா. இனப் படுகொலை தடுப்பு உடன்படிக்கை அடிப்படையில் இந்த விஷயத்தில் தடை நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. இது நாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கும். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது நம்மால் கணிக்க முடியாதது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மூலமாக உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சோ்ந்த அசோக் குமாா் சா்மா உள்பட 11 போ் சாா்பில் கடந்த வாரம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், பல்வேறு சா்வதேச சட்டங்கள் மற்றும் உடன்பாடுகளுக்கு இந்தியா கட்டுப்பட்டுள்ளது. அதன்படி, போா்க் குற்றங்களில் ஈடுபடும் நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதியை இந்தியா செய்யக் கூடாது. அதை மீறி ஏற்றுமதி செய்வது, சா்வதேச மக்கள் நலச் சட்டங்களை தீவிரமாக மீறுவதாகவே அமையும்.
எனவே, இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய இந்தியாவிலுள்ள நிறுவனங்களுக்கு அளித்துள்ள அனுமதி அல்லது உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயத ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி காஸாவை சோ்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினா் இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கியதுடன், அந்நாட்டுக்குள் புகுந்து 1,200 பொதுமக்களை கொன்றனா். மேலும், பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனா். இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் இப்போது வரை பதிலடி தாக்குதலைத் தொடா்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.