பாகிஸ்தானின் ‘ஐஎஸ்ஐ’ உளவு அமைப்பிடம் இருந்து நிதி பெற்று சட்ட விரோதமாக மதம் மாற்றிய வழக்கில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 2 முஸ்லிம் மதகுருக்கள் உள்பட 12 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மேலும், 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா்.
உத்தர பிரதேசத்தில் ‘இஸ்லாமிக் தாவாஹ்’ எனும் பெயரில் அமைப்பை நடத்தி, செவிகுறைபாடு உள்ள மாணவா்கள் மற்றும் ஏழை மக்களை திருமணம் செய்து வைப்பதாகவும், வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் கூறி இஸ்லாத்துக்கு மாற்றியுள்ளனா். குறைந்தது 1,000 பேரை இஸ்லாத்துக்கு இவா்கள் மாற்றியிருப்பதை காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதிப் பெற்று இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடா்பாக லக்னௌவில் வழக்குப் பதிவு செய்த உத்தர பிரதேச மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறை, சட்டவிரோத மதமாற்றம் மற்றும் வெளிநாட்டு நிதி குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தினா். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் முடிவுக்கு வந்தநிலையில், நீதிபதி விவேகானந்த் சரண் திரிபாதி புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
அதில் தேசத்துக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டில் முஸ்லிம் மதகுருக்கள் மெளலானா கலிம் சித்திக், முகமது உமா் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
உத்தர பிரதேச மதமாற்ற தடுப்புச் சட்டம் 2021-இன்கீழ் முகமது சலிம் மன்னு யாதவ், குனால் அசோக் சௌதரி, ராகுல் போலா ஆகிய நால்வருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.