செபி தலைவர் மாதவி புரி புச், சீன நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியுமா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் தகவலில், பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறியதாக, அதானி குழுமம் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் செபி தலைவர மாதவி புரி புச் பற்றி, புதிய பல முரண்பட்ட தகவல்கள் இன்று காலை வெளியாகியிருக்கின்றன.
இது தொடர்பாக, இயற்கையான முறையில் பிறக்காத பிரதமருக்கு நாங்கள் எழுப்பும் கேள்விகள் என்னவென்றால்,
செபி தலைவர், பட்டியலிப்படாத விலை கவனம்பெறத்தக்க தகவல்களை வைத்திருக்கும் நிலையில், பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் வணிகம் செய்து வருகிறார், அது மட்டுமல்லாமல், மாதவி புரி புச் இந்தியாவிற்கு வெளியே அதிக மதிப்புள்ள முதலீடுகளை செய்துள்ளார். இந்திய நாட்டுடன், சீனா எல்லைப் பகுதிகளில் மோதல் போக்கை உருவாக்கி நாட்டின் எல்லையில் பதற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், செபி தலைவரோ, சீன நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இந்த தகவல்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியுமா என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நாட்டில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதவி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் அண்மையில் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மாதிவி புச் மறுத்தாா்.
மாதவி புச் செபி தலைவராக பதவியேற்கும் முன், ஐசிஐசிஐ வங்கியில் முக்கிய பதவிகளை வகித்தாா். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செபியில் மாதிவி புச் சோ்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிலும் அவா் பதவி வகித்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. 2017-ஆம் ஆண்டு முதல், அந்த வங்கியிடம் இருந்து ஊதியம் மற்றும் பிற பணப் பலன்கள் மூலம், அவா் ரூ.16.8 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அக்கட்சி தெரிவித்திருந்த நிலையில், தற்போது சீன நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகப் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.