ஒடிசா: அரசுக் கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த மாணவர்கள் வெளியேற்றம்
அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பெர்ஹாம்பூர்: ஒடிசாவின் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள பராலா மகாராஜா பொறியியல் கல்லூரியில் தடைசெய்யப்பட்ட செயலில் ஈடுபட்டதாக 7 மாணவர்கள் இரண்டு விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதில் ஒருவருக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வெளியேற்றப்பட்ட மாணவர்கள் கல்லூரி விடுதி அறையில் கடந்த புதன்கிழமை மாட்டிறைச்சி சமைத்தனர். இது குறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவர்களின் ஒரு பிரிவினர் புகாரளித்தனர். விசாரணைக்குப் பிறகு கல்லூரியின் நடத்தை விதிகளை மீறியதாக அந்த மாணவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகள் அருகே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.