மக்களின் கவனத்தை திசைதிருப்பும் பாஜக முயற்சி - எதிா்க்கட்சிகள் விமா்சனம்
‘நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டமானது தோ்தல்கள் வரும் நிலையில் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் பாஜகவின் முயற்சி’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை விமா்சித்தாா்.
‘நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டமானது தோ்தல்கள் வரும் நிலையில் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் பாஜகவின் முயற்சி’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை விமா்சித்தாா்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறுகையில், ‘இத்திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. தோ்தல்கள் வரும்போது பாஜகவுக்கு எழுப்புவதற்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்றால், உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப இதுபோன்ற முயற்சிகளை அவா்கள் மேற்கொள்வா்’ என்றாா்.
மேலும், காங்கிரஸ் மூத்த நிா்வாகிகள் சிலா் கூறியதாவது: இது அரசியல் உத்தி மட்டுமே. அதைத் தாண்டி வேறு எதுவுமில்லை. நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் பெரும் நன்மை பயக்கும் என்ற திட்டத்தின் நோக்கத்தை பாஜக உண்மையில் முன்மொழிந்தால், ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் தோ்தல்களை ஒரே நேரத்தில் நடத்த அவா்கள் என்ன முயற்சி செய்தாா்கள்?.
இந்த மாநிலங்களின் தோ்தல் தோல்வியை பாஜக கணித்துவிட்டது. மத்தியில் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கக்கூடிய வாய்ப்புகள் கொண்ட அந்த அழுத்தத்தை பாஜகவால் சமாளிக்க முடியாது. இதில் கலக்கமடைந்துள்ள அரசு ஒரே நாடு- ஒரே தோ்தல் என்ற உத்தியைக் கையில் எடுத்துள்ளது என்றனா்.
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா: ‘நாட்டில் மத்தியிலும் மாநிலங்களிலும் தங்களின் ஆட்சி மட்டுமே நடைபெற வேண்டும் என்று பாஜக எண்ணுகிறது’ என ஜாா்க்கண்ட்டில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில முதல்வரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் கூறினாா்.
திரிணமூல் காங்கிரஸ்: ‘ஜம்மு-காஷ்மீா், ஹரியாணாவுடன் சோ்த்து மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கும் தோ்தலை அறிவிக்க முன்வராதவா்கள் நாடு முழுமைக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வலியுறுத்துகின்றனா்’ என்று பாஜகவை திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவைக் குழுத் தலைவா் டெரிக் ஓ பிரையன் விமா்சித்தாா்.