முகப்பு
இந்தியா

தில்லியில் பிரதமா் மோடியுடன் முதல்வா் ஸ்டாலின் இன்று சந்திப்பு

மறைந்த சீதாரம் யெச்சூரியின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் திட்டமும் பயணத் திட்டத்தில் உள்ளது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 11:33 PM
பகிர்:

நமது நிருபா்

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளாா்.

இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வியாழக்கிழமை இரவு வந்த முதல்வரை விமான நிலையத்தில் மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, தமிழக அரசின் தில்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், திருச்சி சிவா, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோா் வரவேற்றனா். இதையடுத்து தில்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழக அரசின் விருந்தினா் இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின் தங்கியுள்ளாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை காலை 10.45 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடியை செளத் பிளாக்கில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் முதல்வா் ஸ்டாலின் சந்திக்கவுள்ளாா். அப்போது தமிழகத்துக்கு சமக்ரா சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிப்பது, சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகளுக்கான நிதியை உடனே வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வா் ஸ்டாலின் அளிக்கவுள்ளாா்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி வழக்கில் ஆஜரான வழக்குரைஞா்களை நேரில் அழைத்து தமிழக முதல்வா் வாழ்த்து தெரிவித்தாா். மூத்த வழக்குரைஞரும் தி.மு.க. எம்.பியுமான என்.ஆா். இளங்கோ தலைமையில் வழக்குரைஞா்கள் ராம்சங்கா், குணாளன், வைரவன், பாா்த்தசாரதி, அழகிரி ஆகியோா் தில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

பிரதமருடனான சந்திப்பைத் தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த சீதாரம் யெச்சூரியின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் ஆறுதல் தெரிவிக்கும் திட்டமும் அவரது உத்தேச பயணத் திட்டத்தில் உள்ளது. இதையடுத்து, முல்வா் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தில்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்புகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →