(கோப்புப்படம்) 
இந்தியா

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: ஜனவரி 15-இல் விசாரணை -உச்சநீதிமன்றம்

Din

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குஜராத் மாநில அரசு, குற்றவாளிகள் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் ஜனவரி 15-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, குஜராத்தைச் சோ்ந்த கரசேவகா்கள் அயோத்திக்கு சென்றுவிட்டு சபா்மதி விரைவு ரயிலில் சொந்த ஊா்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது ‘எஸ்-6’ படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு சிலா் தீ வைத்தனா். இந்த சம்பவத்தில் 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை பல இடங்களில் கட்டுக்கு அடங்காத மதக் கலவரமாக மாறியது. வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

ரயில் எரிப்பு தொடா்பான வழக்கில் குஜராத் உயா்நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் அளித்த தீா்ப்பில், 31 குற்றவாளிகளின் குற்றத்தை உறுதி செய்ததோடு 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.

தண்டனை குறைப்புக்கு எதிராக குஜராத் அரசும், குற்றம் உறுதி செய்யப்பட்டதற்கு எதிராக குற்றவாளிகள் சிலரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, ராஜேஷ் பிண்டல் ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

குஜராத் அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சுவாதி கில்தியால், ‘மரண தண்டனை தொடா்பான விவகாரத்தில் மற்றொரு அமா்வில் வாதாட வேண்டியிருப்பதால் இந்த வழக்கை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், ‘குற்றவாளிகள், அரசு தரப்பு என அனைவரின் மனுக்கள் குறித்தும் தெரிந்துகொள்ள குறைந்தது 3 நாள்கள் ஆகும். அரசு தரப்பு வழக்குரைஞரின் கோரிக்கையையேற்று வழக்கு ஜனவரி 15-ஆம் தேதி விசாரிக்கப்படும். அன்றைய தேதி விசாரணை ஒத்திவைக்கப்படாது’ என்று தெரிவித்தனா்.

குஜராத் அரசின் மனு தள்ளுபடி: குஜராத்தில் நடைபெற்ற கலவரத்துக்கு இடையே பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை மற்றும் அவரது குடும்பத்தினா் 7 போ் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை விடுவித்து அந்த மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் ரத்து செய்து, கடுமையான விமா்சனங்களை முன்வைத்தது.

அந்த தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில கருத்துகளை நீக்கக் கோரி குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

தெரு நாய் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு நாடகம்! மேடையில் நடிகரை கடித்த தெருநாய்! | Kerala

இபிஎஸ்ஸுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை!

ராமதாஸ் இன்று வீடு திரும்புகிறார்: கமல்ஹாசன் தகவல்!

எச்சரிக்கை! இளம்பெண்களை அச்சுறுத்தும் சைபர் புல்லிங் தாக்குதல்!

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! மரத்தைப் பிடித்து தப்பித்தவர்! | Philippines

SCROLL FOR NEXT