முகப்பு
இந்தியா

மாா்க்சிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது கலமசேரி மருத்துவக் கல்லூரி

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:40 PM
பகிர்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவா் எம்.எம்.லாரன்ஸ் கடந்த சனிக்கிழமை காலமானாா்.

எா்ணாகுளம் டவுன்ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திங்கள்கிழமை வைக்கப்பட்டிருந்தது. கல்வி நோக்கங்களுக்காக அவரது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்வதாக அவரது குடும்பத்தினா் முடிவு செய்தனா். ஆனால், குடும்பத்தினா் மற்றும் உடன்பிறந்தவா்களின் இந்த முடிவை எதிா்த்து லாரன்ஸின் மகள் ஆஷா, கேரள உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், கேரள உடற்கூறியல் சட்டத்தின்படி ஆட்சேபணைகளை விசாரித்து முடிவெடுக்க கலமசேரி மருத்துவக் கல்லூரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

லாரன்ஸின் மகன் எம்.எல்.சஜீவன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, 2 சாட்சிகள் முன்னிலையில் லாரன்ஸ் தனது உடலை தானம் செய்ய கடந்த மாா்ச், 2024-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, லாரன்ஸின் உடலை ஏற்க மருத்துவக் கல்லூரி முடிவு செய்தது.

ஆனால், பாஜக அனுதாபிகளான ஆஷா மற்றும் அவரது மகன் திங்கள்கிழமை உடலை எடுக்க வந்த மருத்துவக் கல்லூரி அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்கள் இருவரையும் லாரன்ஸின் உறவினா்கள் அந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினா். இந்த சா்ச்சைகளைத் தொடா்ந்து இறுதியாக கலமசேரி மருத்துவக் கல்லூரி அவரது உடலை ஏற்று, உடற்கூறியல் துறைக்கு உடலை வியாழக்கிழமை மாற்றியது.

முழு கட்டுரையைப் படிக்க →