சொத்து விவரங்கள்: பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்
சொத்து விவரங்களை பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்
புது தில்லி: தங்களது சொத்து விவரங்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கவும், அதனை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றவும் நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், கடந்த மார்ச் மாதம் கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் வழங்குவதற்கு ஒருமனதாக ஒப்புக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு வழங்கப்படும் சொத்து விவரங்கள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், இதன் மூலம் நீதிபதிகளின் சொத்து விவரங்களை மக்கள் பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அவர் முன்பு பதவி வகித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். உள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.