கேரளத்தில் கோவில் திருவிழாவில் ஆர்எஸ்எஸ் பாடல் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவில் நிர்வாகத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரளத்தின் கொட்டுக்கல் பகுதியில் மஞ்சிப்புழா ஸ்ரீ பகவதி பத்ரகாளி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய நிகழ்வில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘கானகீதம்’ என்ற பாடல் இசைக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
இதுதொடர்பாக கொட்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பிரதின் என்பவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதுமட்டுமின்றி, திருவாங்கூர் தேவசம் போர்டின் கீழ் இயங்கும் இந்தக் கோவிலின் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டதாக கோவில் ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் அகில் சாய் என்பவரும் தனியே புகாரளித்துள்ளார்.
“கோவில் திருவிழாவை முன்னிட்டு பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கொடிகள் கோவில் வளாகம் முழுவதும் கட்டப்பட்டுள்ளன. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சிலரின் அனுமதியுடன் இந்தக் கொடிகள் கட்டப்பட்டன. இதனை உடனடியாக அகற்றவேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்த அவர் ஆர்எஸ்எஸ் பாடல் இசைக்கப்பட்டது பற்றியும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி கோவில் பணியாளர் ஒருவர் கூறுகையில், பார்வையாளர்களில் ஒருவர் கேட்டதாலேயே இந்தப் பாடலை இசைக்குழு பாடியதாகவும், கோவில் நிர்வாகத்தினருக்கு இதுபற்றி தெரியாது என்றும் கூறினார்.
இசைக்குழுவை கொட்டுக்கல் பகுதியிலுள்ள சத்ரபதி என்னும் அமைப்பினர் அழைத்து வந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களே ஆர்எஸ்எஸ் பாடல்களையும் பாடச் சொல்லியதாகத் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.
இதேபோல, கேரளத்தில் கடந்த மார்ச் 10 அன்று கடக்கல் தேவி கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிப் பாடல்கள் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.