ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.
ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர்வு முடிவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கடுமையான பயிற்சி செய்து, ஜேஇஇ தேர்வை எழுதி, பிரதானத் தேர்வு எழுதத் தகுதி பெறுவோமா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் மாணவர்கள், பதற்றத்துடன் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறார்.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெறுவது அவசியம்.
அத்தோ்வு ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தோ்வு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு கடந்த ஜன. 22 முதல் 30 வரை நடத்தப்பட்டது. இத்தோ்வை சுமார் 13 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
இந்த நிலையில், ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு ஏப். 1 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேஇஇ தேர்வு
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் ஜேஇஇ தோ்வு முதல்நிலை (மெயின்), முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் இரண்டு தவணைகளாக நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் தகுதியைப் பெறுவா். அதோடு, முதல்நிலைத் தோ்வில் தகுதிபெற்ற முதல் 2.5 லட்சம் போ் முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் சோ்க்கை பெறும் தகுதியைப் பெறுவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.