பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, அட்டாரி - வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
தில்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், உள்துறை அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளாக இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்ததாவது,
சிந்து நதி பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டது. தூதரக உதவிகளைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்டு வந்த எஸ்பிஇஎஸ் (SPES) விசா ரத்து செய்யப்பட்டது. விசா பெற்று இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்துக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படை ஆலோசகர்கள் ஒருவாரத்துக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாதில் இருந்து இந்தியாவுக்கான கடற்படை, விமானப்படை, பாதுகாப்புப் படை ஆலோசகர்களைத் திரும்பப் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளைப் பற்றிய தகவலைத் தெரிவிப்போருக்கு ரூ. 20 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளிக்கும் வரையில் ஓயமாட்டோம் என்று கூறினார்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மத்திய அரசு வெளியிட்ட தாக்குதல் நடத்தியவர்களின் மாதிரி ஓவியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் மூவரும் பாகிஸ்தானியர்கள்போல் உள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீர்: 4 மாதங்களில் வீரர்கள் உள்பட 35 பேர் சுட்டுக்கொலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.