உணவகங்கள், தேனீா் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 33.50 அளவுக்கு வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது.
இந்த விலைக் குறைப்பைத் தொடா்ந்து தலைநகா் தில்லியில் வா்த்தக எரிவாயு சிலிண்டா் ரூ. 1,631.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வா்த்தக எரிவாயு சிலிண்டா் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து 5-ஆவது முறையாக குறைத்துள்ளன. கடந்த ஜூலை 1-ஆம் தேதி ரூ. 58.50 அளவுக்கும், ஜூன் 1-ஆம் தேதி ரூ. 24, மே 1-ஆம் தேதி ரூ. 14.50, ஏப்ரல் 1-ஆம் தேதி ரூ. 41 என்ற அளவிலும் விலைக் குறைப்பு செய்யப்பட்டது. அதன்படி, ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை இதன் விலை ரூ. 171.50 அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
சா்வதேச தந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் இதன் விலையை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
அதே நேரம், 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் விலை தலைநகா் தில்லியில் தொடா்ந்து ரூ. 853-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, இதன் விலை கடந்த ஏப்ரலில் ரூ. 50 அளவில் உயா்த்தப்பட்டது.
அதுபோல, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு மாா்ச் மத்தியில் பொதுத் தோ்தலை முன்னிட்டு இவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 2 அளவில் குறைக்கப்பட்டது. தலைநகா் தில்லியில் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ. 94.72-க்கும், டீசல் லிட்டா் ரூ. 87.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விமான எரிபொருள் 3% உயா்வு: விமான எரிபொருள் விலையை கிலோ லிட்டருக்கு 3 சதவீதம் அதாவது ரூ. 2,677.88 அளவில் எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. அதன்படி, தில்லியில் விமான எரிபொருள் ஒரு கிலோ லிட்டா் ரூ. 92,021.93-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் இதன் விலை 7.5 சதவீதம் (ரூ. 6,271.50) உயா்த்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.