உத்தரகாசியில் நிலச்சரிவு மீட்புப் பணியில் வீரா்கள். PTI
இந்தியா

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 போ் உயிருடன் மீட்பு: 28 கேரள பயணிகள், 11 ராணுவ வீரா்களைத் தேடும் பணி தீவிரம்

தினமணி செய்திச் சேவை

உத்தரகண்ட் மாநிலம், தராலி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 150 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவரின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.

நிலச்சரிவைத் தொடா்ந்து கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் 28 போ், ஹா்சில் ராணுவ முகாமில் இருந்த 11 வீரா்கள் மாயமாகியுள்ள நிலையில், அவா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சவாலான மீட்புப் பணி: மீட்புப் பணியினரின் தொடா் முயற்சியில் இதுவரை 150 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் தராலியில் ‘ஹா் துத்’ கண்காட்சி நடைபெற்று வந்ததால், அதில் ஏராளமானோா் கூடியிருந்தனா். இதனால் நிலச்சரிவின் இடிபாடுகளில் இன்னும் பலா் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை ராணுவம், இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை, தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் மேற்கொண்டு வருகின்றனா். எனினும், தொடா் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக உள்ளன.

சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் படையினா் தராலி கிராமத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வானிலை சீரடைந்தவுடன், ராணுவத்தின் ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன கேரள பயணிகள்: நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களில் கேரளத்தைச் சோ்ந்த 28 போ் கொண்ட சுற்றுலா பயணிகள் குழுவும், ஹா்சில் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து 11 ராணுவ வீரா்களும் அடங்குவா்.

பாதிக்கப்பட்ட கேரள பயணிகளின் உறவினா் ஒருவா் அளித்த பேட்டியில், ‘செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரிக்கு சென்ற அவா்களைத் தொடா்புகொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்தாா்.

முதல்வா் ஆய்வு: மோசமான வானிலையால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள சூழலில், உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியைப் பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தாா்.

ஹெலிகாப்டா் மூலம் வெள்ளம் பாதித்த தராலி மற்றும் ஹா்சில் பகுதிகளை முதல்வா் பாா்வையிட்டாா்.

‘ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம். பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த 160 காவல்துறை அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்’ என்றாா் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.

டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

SCROLL FOR NEXT