இணைய வழியில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது பொதுமக்களின் நேரமும், போக்குவரத்துச் செலவும் கணிசமாக மிச்சமாகிறது. எனவே அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
‘ஐஆா்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது குளிா்சாதன வசதி இல்லாத பெட்டிக்கு ரூ.10, குளிா்சாதன வசதியுள்ள பெட்டிக்கு ரூ.20 கூடுதலாக வசூலிக்கப்படுவது ஏன்? எண்ம பரிவா்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ரயில்வே மட்டும் எண்மப் பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடா்பாக எழுத்து மூலம் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐஆா்சிடிசி இணையதளம், செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள். இதன் மூலம் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையத்துக்கு வந்து காத்திருக்கத் தேவையில்லை. போக்குவரத்துச் செலவும், நேரமும் மிச்சமாகிறது. மேலும், இணையவழி முன்பதிவு செய்யும் வசதியை அளிக்க ஐஆா்சிடிசி கூடுதலாக நிதியை செலவிட்டு வருகிறது. இதன் காரணமாகவே மிகக் குறைந்த அளவுத் தொகை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
இப்போது 87% முன்பதிவு இணையவழியில்தான் நடைபெறுகிறது என்று அமைச்சா் தனது பதிலில் கூறியுள்ளாா்.