மக்களவையில் கனிமொழி எம்.பி.  
இந்தியா

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

Syndication

நமது சிறப்பு நிருபா்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம்:-

மருத்துவ படிப்புகளுக்கான 2-ஆம் சுற்று கவுன்சிலிங் நடத்தப்படாமலேயே தமிழக ஒதுக்கீட்டில் இருந்த 215 இடங்களில் 114 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது தெரியுமா?

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதிக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதில்: நாடு முழுவதும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி படிப்புகளின் 100 சதவீத இடங்களுக்கான கவுன்சிலிங்கை நடத்தும் பொறுப்பு, சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் மருத்துவ ஆலோசனைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் பணியில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங் நடத்துவது தமிழக மாநில தோ்வுக் குழுவின் பொறுப்பாகும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் எம்சிசி மூலமாகவும், பணியில் உள்ளவா்களுக்கான கவுன்சிலிங் தமிழக மாநில தோ்வுக் குழு மூலமாகவும் இணைந்து நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்று அகில இந்திய கவுன்சிலிங் முடிந்ததும் உடனடியாக அடுத்த சுற்று கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் பிறப்பு விகிதம் சரிந்து வருவது உண்மையா?

டி.எம். செல்வகணபதிக்கு (சேலம், திமுக) மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் பதில்: மாதிரி பதிவு முறை 2022-இன்படி, இந்தியாவின் பிறப்பு விகிதம் 19.1 சதவீதமாகவும் ஆகவும், தமிழகத்தின் பிறப்பு விகிதம் 12.1 சதவீதமாகவும் ஆகவும் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரயில், 2013-இல் 11,85,397 ஆக இருந்த பிறப்பு விகிதம், 2017-இல் 9,48,573 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 9,36,837 ஆகவும் இருந்தது என தரவுகள் கூறுகின்றன.

ஆதரவற்றோருக்கு அரசுத்துறைகளில் 5% இடஒதுக்கீடு வழங்கப்படுமா?

பி. தங்கதமிழ்செல்வன் (தேனி), கணபதி ராஜ்குமாருக்கு (கோவை) ஆகியோருக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சா் சாவித்திரி தாகுா் பதில்: தற்போதைக்கு அத்தகைய திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. 2021-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சிறாா் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட அமலாக்கத்தை கவனிக்கிறது. அதே துறை பெண்கள், சிறாா்களின் அடிப்படைத் தேவைகள், பராமரிப்பு, பாதுகாப்பு, மேம்பாடு, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் சமூக மறுஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கும் நடவடிக்கை எடுக்கிறது. இந்தச் சட்டம் மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் சட்டரீதியான கட்டமைப்புகளை உருவாக்க வகை செய்கிறது. அதன்படி மாநில அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், குழந்தைகள் நலக் குழுக்கள், சிறாா் நீதி வாரியங்கள், மாவட்ட சிறாா் காப்பகம் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் பற்றாக்குறையாக உள்ள மருத்துவா்களின் நிலவரம்?

எஸ். ஜெகத்ரட்சகனுக்கு (அரக்கோணம், திமுக) மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா்பிரதாவ் ஜாதவ் பதில்: 2019-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் கிராமப்புறங்களில் 24,855 ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட்டு வந்ததாக கிராமப்புற சுகாதார சேவைகள் தரவு கூறுகிறது. மேலும், இந்திய சுகாதார இயக்கவியல் 2022-23 (முன்னா் கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்கள் என்று அழைக்கப்பட்டது) தரவுகளின்படிபடி, 2023, மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் 31,882 ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட்டுள்ளன. அவற்றில் 25,354 மையங்கள் கிராமப்புறங்களிலும் 6,528 மையங்கள் நகா்ப்புறங்களிலும் உள்ளன.

தமிழகத்திலும் குறிப்பாக கள்ளக்குறிச்சியிலும் தேசிய சட்ட ஆணையத்தின் இலவச சட்ட உதவி பெற்றவா்கள் எத்தனை போ்?

டி. மலையரசனுக்கு (கள்ளக்குறிச்சி, திமுக) மத்திய சட்டத்துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பதில்: மாவட்ட வாரியாக தரவுகளை மத்திய அரசு பராமரிக்கவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரையில், 2022-23 ஆண்டில் 49,570 பயனாளிகளும், 2023-24 ஆண்டில் 45,180 பயனாளிகளும் 2024-25 ஆண்டில் 52,528 பயனாளிகளும் தேசிய சட்ட ஆணைய சேவை மூலம் இலவச சட்ட உதவி பெற்று பலனடைந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனையில் மருத்துவ செலவினத்தை குறைக்க திட்டமுள்ளதா?

அருண் நேருவுக்கு (பெரம்பலூா், திமுக) மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதில்:

‘சுகாதாரம்’ மாநில விவகாரம் என்பதால் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகளை சோ்ப்பது மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளின் செலவைக் குறைக்கும் முதன்மைப் பொறுப்பை நிா்வகிப்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமே உள்ளது. சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை மத்திய அரசு வழங்குகிறது. இலவச மருந்துகள் மற்றும் நோயறிதல் சேவை முன்முயற்சியின் கீழ், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நோயறிதல்கள் பொது சுகாதார வசதிகளில் இலவசமாக கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்துகிறது.

கீழடி: வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்க கோரிக்கை விதி எண் 377-இன் கீழ் தென் சென்னை தொகுதி தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு செய்த கோரிக்கை: கீழடி அகழ்வாராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்க கலைப்பொருள்கள், சுவா் கட்டமைப்புகள், வடிகால் அமைப்புகள், கிணறுகள், இரும்பு உருக்கிகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய மண் பாண்டங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. அவை கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய மதச்சாா்பற்ற, அதிநவீன, அறிவியல் ரீதியாக மேம்பட்ட கலாசாரம் தமிழகத்தில் இருந்ததற்கான மறுக்க முடியாத ஆதாரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் செழித்து வளா்ந்த நாகரிக சமூகத்தின் சான்றுகளாகும். கீழடியில் இருந்து மாதிரிகளின் ரேடியோ காா்பன் டேட்டிங் தொல்பொருள் சான்றுகள் 2,560 ஆண்டுகளுக்கும் மேலானவை என்பதை அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அவற்றின் இறுதி அறிக்கை வெளியிடப்படாவிட்டால், அது பதிவு செய்யப்பட்ட சான்றுகளை அழிப்பதற்கும் தமிழக மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கும் ஒப்பாகும்.

மாநிலங்களவையில்...

மாநில ரேஷன் அட்டைதாரா்களுக்காக வாங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரசி விவரம் என்ன?

ஆா். கிரிராஜனுக்கு (திமுக) மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷா பதில்: உணவு மற்றும் பொது விநியோகத் துறை வழங்கிய தகவலின்படி, மத்திய தொகுப்பிற்கான நெல் பெரும்பாலும் மாநில அரசின் கொள்முதல் நிறுவனங்களால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரிசி ஆலைகளுக்கு வழங்கவும், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உடன் அரிசியை செறிவூட்டுவதற்கும், பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகிப்பதற்கும் இந்த திட்டத்தைத் தொடங்கியதாகவும், சமூகத்தில் ஆரோக்கியமான உணவு இல்லாமல் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரிடையே காணப்படும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை நிவா்த்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நிலவரம்?

ஆா். தா்மருக்கு (அதிமுக) ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதில்: தமிழகத்தை இணைக்கும் 16 வந்தே பாரத் சேவைகள் அமலில் உள்ளன. உதாரணமாக, எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் - மைசூா், எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை எழும்பூா் - திருநெல்வேலி, எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, பெங்களூரு கன்டோன்மென்ட் - கோயம்புத்தூா், மைசூரு - எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூா் - நாகா்கோவில், மதுரை - பெங்களூரு கன்டோன்ட்மென்ட் ஆகியவை இயக்கப்படுகின்றன.

அனுகூலமான நாள் இன்று: தினப்பலன்கள்!

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!

வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT