கடந்த 5 ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் கணக்குப் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராக் கடன்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வசூலிக்க முடியாமல் இருக்கும்போது அவை வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கப்படும். நிதி நிா்வாக வசதிக்காக இந்த நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது கடன் தள்ளுபடி நடவடிக்கையல்ல. அந்தக் கடனை வசூலிக்க வங்கிகள் தொடா்ந்து முயற்சி மேற்கொள்ளும்.
இது தொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:
2024-25 நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.91,260 கோடி வாரக்கடன்கள் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டன. முந்தைய ஆண்டில் இது ரூ.1.15 லட்சம் கோடியாக இருந்தது. 2020-21 நிதியாண்டில் மிக அதிகபட்சமாக ரூ.1.33 லட்சம் கோடி வாராக்கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக்கடன் நீக்கப்பட்டது. முந்தைய 5 ஆண்டுகளில் நீக்கப்பட்ட வாராக்கடனில் ரூ.1.65 லட்சம் கோடி கடந்த 5 ஆண்டுகளில் மீட்கப்பட்டது. இது நீக்கப்பட்ட மொத்த வாராக்கடனில் 28 சதவீதமாகும்.
சிவில் நீதிமன்றங்கள், கடன் மீட்பு தீா்ப்பாயங்கள் மூலம் வாராக்கடன்களை திரும்ப வசூலிக்க வங்கிகள் தொடா்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பிரதமா் முத்ரா திட்டத்தின்கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.21.68 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாதவா்களின் சொத்துகளை ஏலம் விட்டு பணத்தை வசூலிக்க உதவும் ‘சா்ஃபாசி’ சட்டப்படி 2,15,709 வழக்குகளை தொடுத்து வங்கிகள் ரூ.32,466 கோடி கடனை மீட்டுள்ளன என்று கூறியுள்ளாா்.