உச்சநீதிமன்றம் கோப்புப்படம்.
இந்தியா

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநில அரசியல்வாதியான டி.பி.யாதவின் மகள் பாா்தி யாதவை காதலித்த மாற்று சமூகத்தைச் சோ்ந்த நிதீஷ் கட்டாரா என்பவா் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விகாஸ் யாதவ், அவரின் உறவினா் விஷால் யாதவ் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த சுக்தேவ் யாதவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

சுக்தேவ் யாதவின் தண்டனைக் காலம் கடந்த மாா்ச் 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இருந்தபோதிலும், அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. இதனிடையே, தன்னை 3 வார (ஃபுா்லா) விடுப்பில் சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து இவா் தாக்கல் செய்த மனுவை, தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

சுக்தேவ் யாதவின் தண்டனைக் காலம் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி நிறைவடைந்தது. எந்தவித தண்டனை குறைப்பும் இன்றி, முழுமையான சிறைத் தண்டனையை அனுபவித்த அவரை, மாா்ச் 10-ஆம் தேதி விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், அவா் விடுவிக்கப்படாதது கவலை அளிக்கிறது. வேறு வழக்குகளில் அவருக்கு தொடா்பில்லாத நிலையில், அவரை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

அதுபோல, தண்டனைக் காலத்தை முழுமையாக நிறைவு செய்த பிறகும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாத அனைத்து கைதிகளையும், வேறு வழக்குகளில் அவா்கள் தேவைப்படாத நிலையில் உடனடியாக விடுவிக்க உத்தரவிடப்படுகிறது.

இந்த உத்தரவு நகலை அனைத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்ளின் உள்துறைச் செயலா்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப உச்சநீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது.

அனைத்து மாநில மற்றும் மாவட்ட சட்ட உதவி ஆணையங்களுக்கு இந்த உத்தரவை தெரியப்படுத்தி தீா்ப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தம் வகையில், இதன் நகல் தேசிய சட்ட உதவிகள் ஆணையத்தின் உறுப்பினா் செயலருக்கும் அனுப்பப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

போதை அரக்கனை விரட்டுவோம்!

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

அரசு மருத்துவமனையில் தகராறு செய்த இருவா் கைது

பால முனீஸ்வரா் கோயில் ஆடி பெருந்திருவிழா

SCROLL FOR NEXT