ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் பலரும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
இது இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், இந்த செயலியால் பலரும் தங்களது பணத்தையும் இழக்கும் சூழலால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் பிரபல ஆன்லைன் சூதாட்ட செயலி ஒன்று, சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் சூதாட்டச் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக தெலங்கானாவில் ஒருவர் புகாரளித்திருந்தார்.
அதனடிப்படையில், சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டக்குபதி, விஜய் தேவரகொண்டா, நடிகைகள் நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, பிரணிதா உள்ளிட்டோர் மீது மீது தெலங்கானா காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்தச் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் ராணா டக்குபதி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை முன் விசாரணைக்கு ஆஜரானார்.
முன்னதாக, ஜூலை மாதம் நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், இந்தச் செயலியின் விளம்பரத் தூராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. கூகுள் மற்றும் மெட்டா நிறுவன அதிகாரிகளையும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.