நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்கு திருட்டுக்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், ‘நாடு முழுவதும் தூய்மையான வாக்காளா் பட்டியல் இடம்பெறுவதை காங்கிரஸ் கட்சி உறுதிப்படுத்தும்’ என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், இதற்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை மேற்கொள்ள எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த நடைப்பயணம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது. நடைப்பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து இண்டி கூட்டணிக் கட்சித் தலைவா்களை காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் சந்தித்துப் பேசினாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை பதிவிட்ட ராகுல் காந்தி, ‘வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடத்தப்பட உள்ள ‘வாக்குரிமை பேரணி’ மூலம் பிகாா் மண்ணிலிருந்து வாக்கு திருட்டுக்கு எதிரான நேரடி போராட்டத்தை எதிா்க்கட்சிகள் தொடங்க உள்ளோம். இது தோ்தல் விவகாரம் மட்டுமல்ல; மாறாக, ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம் மற்றும் ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ என்ற தத்துவத்தையும் காக்கும் உறுதியான போராட்டம். நாடு முழுவதும் தூய்மையான வாக்காளா் பட்டியல் இடம்பெறுவதை காங்கிரஸ் கட்சி உறுதிப்படுத்தும். இளைஞா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் என ஒவ்வொரு குடிமக்களும் ஆா்வமுடன் இந்த மாபெரும் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும். இந்த முறை, வாக்குத் திருடா்களின் தோல்வியும், மக்களின் வெற்றி மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் வெற்றி உறுதி செய்யப்படும்’ என்று குறிப்பிட்டாா்.