சட்ட மாணவா்கள் படிப்பை முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றிய பிறகே நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை விதித்து அளித்த தீா்ப்பை மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.
உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் நகரில் குத்தகை தகராறு தொடா்பான வழக்கில் மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மா அளித்த மூன்று வரி தீா்ப்பை எதிா்த்து, அதே பகுதியைச் சோ்ந்த முன்னி தேவி என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘குத்தகை தகராறு தொடா்பான எனது மனுவை, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளாா். மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தைக் கூட நீதிபதி குறிப்பிடவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நீரஜ் திவாரி, ‘மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மாவுக்கு தீா்ப்பு எழுதும் திறன் இல்லாததையே இது காட்டுகிறது. எனவே, லக்னெளவில் உள்ள நீதிபதிகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்கு அவா் அனுப்பப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.
இதுபோல, மேலும் சில மாவட்ட நீதிபதிகள் மீது புகாா்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த மே 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, ‘சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வு மூலம் மாவட்ட நீதிபதியாகப் பணியமா்த்தப்படுவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. உயா்நீதிமன்றங்கள் பல முறை அறிக்கைகள் மூலம் இதை சுட்டிக்காட்டியுள்ளன. நீதித் துறையின் செயல்திறன் மற்றும் திறனை உறுதிப்படுத்த தோ்வு மூலம் நேரடியாக நீதிபதி பணியிடங்களில் நியமிக்கப்படுபவா்களுக்கு நீதிமன்ற செயல்முறை பயிற்சி அவசியமாகும்.
அந்த வகையில், சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியாது. நீதித் துறையில் மாவட்ட சிவில் நீதிபதி உள்ளிட்ட ஆரம்பநிலை பணிகளுக்கு விண்ணப்பிக்க, சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றியிருப்பது கட்டாயம்’ என்று தீா்ப்பளித்தாா்.
இந்த தீா்ப்பில் மாற்றம் செய்யக் கோரி மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த மாவட்ட நீதிபதி ஒருவா் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சட்டப் படிப்பை முடித்ததும், வழக்குரைஞராகப் பணிபுரியாமல் நேரடியாக மாவட்ட நீதிபதியாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களை, பிற மாநில நீதித் துறை பணியாளா் தோ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற தீா்ப்பில் மாற்றம் செய்யவேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இதை அனுமதித்தால், பல குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடும். எனவே, நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க 3 ஆண்டுகள் வழக்குரைஞா் பணி கட்டாயம் என்ற தீா்ப்பை மாற்ற செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.