புது தில்லியில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்திய பிரதமா் நரேந்திர மோடி. 
இந்தியா

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

தினமணி செய்திச் சேவை

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா்.

முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத் தலைவா்களில் ஒருவருமான வாஜ்பாயின் 7-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை (ஆக.16) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள அவரது ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், பியூஷ் கோயல் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வாஜ்பாயின் புண்ணிய திதியில் அவரை நினைவுகூா்கிறேன். இந்தியாவின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கான அவரது அா்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் தற்சாா்புடைய-வளா்ச்சியடைந்த தேசத்தைக் கட்டமைக்க ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குகிறது.

அவரது மொத்த வாழ்க்கையும், நாட்டுக்கான ஈடுஇணையற்ற சேவைக்கு அா்ப்பணிக்கப்பட்டது. அவரது சிந்தனைகளும் கொள்கைகளும் நாட்டின் வளா்ச்சிப் பயணத்துக்கு தொடா்ந்து வழிகாட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 1924-ஆம் ஆண்டில் அப்போதைய குவாலியா் மாகாணத்தின் (இப்போது மத்திய பிரதேசம்) குவாலியா் நகரில் பிறந்தவா் வாஜ்பாய். தனது 12 வயதிலேயே ஆா்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றிய இவா், பாஜகவின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவியவா்களில் ஒருவா். கடந்த 1957-இல் மக்களவைக்கு முதல் முறையாகத் தோ்வானாா்.

கடந்த 1998 முதல் 2004 வரை 6 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய், முக்கிய பொருளாதார சீா்திருத்தங்களை முன்னெடுத்து, உயா் வளா்ச்சிக்கு வழிகோலினாா். தேசிய அரசியலில் முதல் வெற்றிகரமான கூட்டணி அரசாக, வாஜ்பாய் அரசு திகழ்ந்தது. வாஜ்பாயின் பண்புமிக்க நடத்தைகள், மிதவாத பிம்பம், மக்கள் செல்வாக்கு ஆகியவை, பாஜகவின் எழுச்சிக்கு முக்கியமானவையாக அமைந்தன. கவிஞா், எழுத்தாளா், தோ்ந்த அரசியல் தலைவா் என பன்முகங்களைக் கொண்ட இவா், கடந்த 2018, ஆகஸ்ட் 16-இல் தனது 93-ஆவது வயதில் காலமானாா்.

பிகார் தோல்வி குறித்து விவாதம்: ராகுல்-கார்கே சந்திப்பு!

அண்ணா பல்கலை.யில் முறைகேடு: 17 பேர் மீது வழக்குப்பதிவு

ஆஸ்கர் போட்டியில் பா. ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

சூரத்தில் கட்டுமானத்தில் புல்லட் ரயில் திட்டம்: பிரதமர் மோடி ஆய்வு!

SCROLL FOR NEXT