மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்ட கால வரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசு உச்சநீ திமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. அதில், 10 மசோதாக்கள் மீது உரிய முடிவெடுக் காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், மாநில அரசால் நிறை வேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக் குள் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டது.
இந்தக் காலவரம்பு குறித்து 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கேட்டு ஒரு குறிப்பை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அனுப்பியிருந்தார்.
குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை மேற்கொண்டு, இந்தவழக்கில் மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.
மத்திய அரசு: இந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் முன்மொழிவு குறிப்பு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு மசோதாவை நிறுத்திவைப்பதற்கான விருப்புரிமை அரசமைப்பு ரீதியாக குடியரசுத் தலைவர், ஆளுதருக்கு உள்ளது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு அரசமைப்பில் எந்தவொரு வெளிப்படையான காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை.
அப்படியிருக்கையில், நீதித் துறை காலக்கெடு விதிப்பது அரசமைப்பின் நோக்கத்தை தோல்வியுறச் செய்துவிடும்; அரசமைப்புச் சீர்குலைவுக்கும் வழிவகுத்துவிடும். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதித்துறை காலக்கெடு விதித்தது அரசமைப்புச் செயல்பாட்டில் ஒரு குழப்பத்தையும், சிக்கலையும் உருவாக்கியுள்ளது.
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதித் துறை காலக்கெடு விதிப்பது அரசமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சமமாகும். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்து வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என அதில் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
விசாரிக்கக் கூடாது: தமிழக அரசு:
தெளிவுரை கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பு அனுப்பிய தற்கு ஆட்சேபம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துபூர்வவாதத்தை தாக்கல் செய்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கால நிர்ணயம் தொடர்பாக விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கோரி அனுப்பிய குறிப்பை விசாரிக்கத் தேவையில்லை.
ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட விவகாரத்தை குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்காக மாற்றமுடியாது. அரசியல் காரணங்களுக்காக எழுப்பப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்காமல் நிராகரிக்கலாம். அதற்கான அதிகாரம் உள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பை பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.