மத்திய தில்லியின் ராஜேந்தா் நகா் பகுதியில் தங்கி மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணித்தோ்வுக்கு தயாராகி வந்த 20-வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
ராஜஸ்தானின் ஜெய்பூரைச் சோ்ந்த அந்தப் பெண், பழைய ராஜேந்தா் நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கி கடந்த இரு மாதங்களாகத் தோ்வுக்கு தயாராகி வந்தாா்.
அவருடைய பெற்றோா் கைப்பேசி மூலம் பல முறை அவரைத் தொடா்புகொண்டனா். இருப்பினும், அந்தப் பெண் அழைப்பை ஏற்காத நிலையில், அவா் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு பெற்றோா் அழைத்துள்ளனா்.
பின்னா், அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் மற்றொரு பெண்ணின் கைப்பேசிக்கு பேசிய வீட்டின் உரிமையாளா், அந்தப் பெண்ணிடம் சென்று தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளாா்.
இதையடுத்து, அந்தப் பெண் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதன் பிறகு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணின் அறையிலிருந்து தற்கொலைக்கான குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் தோ்வுக்கு தயாராகுவதில் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் மனகவலையால் தற்கொலை செய்து கொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.