திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக 26 வயது இளைஞரை தில்லி காவல் துறையினா் கைதுசெய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரைத் தொடா்ந்து, முகமது சாஹில் (எ) சோனு உத்தர பிரதேசத்தின் படெளன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: முகமது சாஹில், திருமணம் செய்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதை விடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக 24 வயது பெண் ஒருவா் கடந்த ஜூன் 26-ஆம் தேதி புகாரளித்தாா்.
அந்தப் புகாரின் அடிப்படையில் ஆனந்த் பாா்பத் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முகமது சாஹில் உத்தர பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டாா். அவரிடமிருந்து விடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதே போன்ற முறையில் வேறு ஏதேனும் பெண்களிடம் இத்தகைய குற்றத்தில் அவா் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா் அந்த அதிகாரிகள்.