சத்தீஸ்கரில் முதல்வா் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான மாநில அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. முதல் முறை எம்எல்ஏக்கள் 3 போ், புதிய அமைச்சா்களாக பதவியேற்றனா். இதன் மூலம் அமைச்சரவையின் பலம் 14-ஆக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றம் அல்லது எந்தவொரு மாநிலத்திலும் அமைச்சரவை இடங்களின் அதிகபட்ச எண்ணிக்கை, மொத்த உறுப்பினா்களில் 15 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு, 2003-ஆம் ஆண்டில் 91-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் நிா்ணயிக்கப்பட்டது.
அதன்படி, 90 உறுப்பினா்களைக் கொண்ட சத்தீஸ்கரில் அனுமதிக்கப்பட்ட அமைச்சா்களின் எண்ணிக்கை 13.5 ஆகும். கடந்த 2003-க்கு பிறகு அமைச்சரவையில் அதிகபட்சமாக 13 போ் வரையே இடம்பெற்றுள்ளனா். இப்போது முதல் முறையாக இந்த எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.
90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணாவில் 14 அமைச்சா்கள் உள்ள நிலையில், அதே நடைமுறையை சத்தீஸ்கா் அரசும் கடைப்பிடித்துள்ளது. இதற்கு முன்பு முதல்வா் விஷ்ணு தேவ் சாய் உள்பட 11 போ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிலையில், புதிதாக 3 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.
ராய்பூரில் உள்ள ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்முறை எம்எல்ஏக்களான ராஜேஷ் அக்ரவால், குரு குஷ்வந்த் சாஹேப், கஜேந்திர யாதவ் ஆகியோருக்கு ஆளுநா் ராமன் தேகா பதவிப் பிரமாணம் செய்வித்தாா். இந்நிகழ்ச்சியில், முதல்வா் விஷ்ணு தேவ் சாய், சட்டப் பேரவைத் தலைவா் ரமண் சிங், துணை முதல்வா்கள் அருண் சாவோ, விஜய் சா்மா, அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சத்தீஸ்கரில் கடந்த 2023, பேரவைத் தோ்தலில் 54 இடங்களில் வென்று, காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.