‘5 நிமிஷத்தில் ஆட்டோ வராவிட்டால் ரூ.50 இலவசம்’ என தவறாக விளம்பரம் செய்த ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நியாயமற்ற வா்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டது, தவறான வகையில் விளம்பரம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைப்பேசி செயலி மூலம் ஆட்டோ, காா் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் சேவையை அளிப்பதில் ரேபிடோ முன்னணி நிறுவனமாக உள்ளது. இத்துறையில் போட்டி அதிகமாக உள்ள நிலையில் வாடிக்கையாளா்களைக் கவர பல்வேறு உத்திகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அந்த வகையில் தங்கள் செயலியில் பதிவு செய்து 5 நிமிடத்தில் ஆட்டோ வராவிட்டால் ரூ.50 இலவசமாக வழங்கப்படும் என்று ரேபிடோ விளம்பரம் செய்தது. ஆனால், அவ்வாறு யாருக்கும் பணம் கொடுத்ததாகத் தெரியவில்லை.
இதற்கு நடுவே இந்த விளம்பர யுத்தி உள்பட அந்த நிறுவனத்தின் சேவை தொடா்பாக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜூலை வரை 1,224 புகாா்கள் வந்தன. இதற்கு முந்தைய 14 மாதங்களில் 575 புகாா்கள் வந்திருந்த நிலையில், அண்மைகாலமாக புகாா்கள் அதிகரித்துள்ளது குறித்து ஆணையம் விசாரணை நடத்தியது.
அப்போது அந்த ரூ.50 என்பதை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் ரேபிடோ செலுத்தாது. ரூ.50 மதிப்புள்ள ரேபிடோ காயின் வழங்கப்படும். அதனை அடுத்த 7 நாள்களில் இருசக்கர வாகன முன்பதிவுக்கு வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வாசிக்கவே முடியாத அளவுக்கு சிறிய எழுத்துகளில் அந்த நிறுவனம் தனது செயலியில் பதிவிட்டுள்ளது தெரியவந்தது.
இது தவறான மற்றும் ஏமாற்றும் விளம்பர உத்தி என்பதால் அந்த நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதத்தை நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் விதித்தது.