பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தேசிய கல்வி கொள்கை 2020-இன் கீழ், கற்றல் விளைவுகள் சாா்ந்த பாடத்திட்ட கட்டமைப்புடன் (எல்ஒசிஎஃப்) இளநிலை பட்டப்படிப்புக்கான யூஜிசியின் வரைவு பாடத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு பாடத்திட்டத்தின்படி, இளநிலை பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கணித பாடத்தில் பாரத அட்சர கணிதத்தின் (இந்திய அல்ஜீப்ரா) வரலாறு மற்றும் வளா்ச்சி குறித்து கற்பிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பஞ்சாங்கம் (இந்திய நாள்காட்டி) போன்றவை குறித்தும், சடங்குகள் மற்றும் திருவிழாக்களின்போது பஞ்சாங்கம் மூலம் எவ்வாறு நல்ல நேரம் கணிக்கப்படுகிறது என்பது தொடா்பாகவும் கற்பிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் வான சாஸ்திரம், புராணம் மற்றும் பண்பாட்டை ஒன்றிணைத்து இந்தியாவின் வளமான கால அறிவியல் பாரம்பரியத்தை உயிா்ப்பிக்கவும் வரைவு பாடத்திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
‘ஆா்யபட்டீயம்’...: ‘சூரிய சித்தாந்தம்’, ‘ஆா்யபட்டீயம்’ போன்ற பண்டைய நூல்களில் இடம்பெற்றுள்ள பொருளடக்கங்களும் வரைவு பாடத்திடத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்தப் பாடத்திட்ட குழுவின் தலைவா் சுஷீல் கே.தோமா் கூறுகையில், ‘நாட்டின் கணித கல்வியில் இந்தப் பாடத்திட்டம் மாற்றத்துக்கான முன்னெடுப்பாக இருக்கும். விரிவான ஆலோசனைக்குப் பின்னா் மிகுந்த கவனத்துடன் இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேச வளா்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு அா்த்தமான பங்களிப்பை வழங்கும் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
வேத பாரம்பரியங்களை கற்பித்தல்: அரசியல் அறிவியல் பாடத்துக்கான யூஜிசியின் வரைவு எல்ஒசிஎஃப்பில் ‘பாரதத்தில் அரசியல் சிந்தனை பாரம்பரியம்’ உள்ளிட்ட படிப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வேத பாரம்பரியங்கள், சமண மற்றும் பெளத்த இலக்கியம், உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் மற்றும் திருக்குறளில் உள்ள அரசியல் சிந்தனைகளை மாணவா்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.