புது தில்லி: பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம் விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
புது தில்லியில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தின் முக்கியமான நுழைவாயிலான ‘கஜ்தார்’ பகுதியிலுள்ளதொரு மரம், பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடுமோ என்கிற நிலை உருவாகியுள்ளது.
சில்வர் ட்ரம்ப்பெட் ட்ரீ என்று வர்ணிக்கப்படும் மஞ்சள் மலர்கள் நிறைந்த இந்த மரம், முக்கிய விஐபிக்கள் செல்லும் வழிப்பாதையில் இடைஞ்சலாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற வளாகத்துக்குள் ‘கஜ்தார்’ பகுதி வழியாகவே பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் சென்று வருகிறது. இந்தச்சூழலில், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி.), மேற்கண்ட மரத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று கருதுகிறார்கள்.
இதனையடுத்து, எஸ்.பி.ஜி. கோரிக்கையின்பேரில் மத்திய பொதுப்பணித் துறையால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்று மரத்தைப் பிடுங்கி வேறு இடத்தில் நட தில்லி வனத்துறை விரைவில் அனுமதி வழங்கியவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசியத் தலைவர்கள் சிலைகள் ஆகியவை நிறுவப்பட்டுள்ள பிரேர்நா ஸ்தலம் பகுதியில் அந்த மரத்தை நடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல மணிநேரம் அமளியால் முடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த வாரம் முடிவடைந்துவிட்டதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் மரம் நடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.