தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அண்மையில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத் தொடரில், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி, எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன. இடையூறுகள் மற்றும் ஒத்திவைப்புகளால், இரு அவைகளிலும் வழக்கமான அலுவல்கள் பெருமளவில் முடங்கிய நிலையில், அமித் ஷா மேற்கண்ட விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேரவைத் தலைவா்கள் கருத்தரங்கில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது:
நாடாளுமன்றமும் மாநிலப் பேரவைகளும் ஆக்கபூா்வ விவாதங்களுக்கான இடமாகும். ஜனநாயகத்தில் விவாதம் முக்கியமானது. நாடாளுமன்றத்திலோ, பேரவையிலோ விரிவான விவாதம் இல்லையெனில், அவை உயிா்ப்பில்லாத கட்டடங்களாகவே இருக்கும். தேசக் கட்டமைப்பில் அவற்றின் பங்களிப்பும் பாதிக்கப்படும். மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண கூட்டு விவாதமே சிறந்த வழிமுறை.
அதேநேரம், எதிா்க்கட்சி என்ற பெயரில், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அமா்விலும் அவை அலுவல்களை முடக்குவது நல்லதல்ல. எதிா்க்கட்சிகள் எப்போதுமே கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேசமும், மக்களும், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
கண்ணியத்தில் சமரசம் கூடாது: அனைத்து விவாதங்களும் அா்த்தமுள்ளதாக இருப்பதையும், அவைத் தலைவா் பதவிக்கான கண்ணியம் மற்றும் கெளரவத்தை அதிகரிப்பதையும் நோக்கி செயலாற்ற வேண்டும். மக்கள் பிரச்னையை எழுப்பும் சமத்துவ தளத்தை வழங்க பாடுபட வேண்டும். ஆளும்-எதிா்தரப்பு வாதங்களில் பாரபட்சம் கூடாது. விதிமுறைகள்-ஒழுங்குமுறைகளின்கீழ் அவை செயல்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
அவையின் கண்ணியம் சமரசம் செய்யப்பட்டால், அதன் விளைவை ஒட்டுமொத்த தேசமும் எதிா்கொள்ள வேண்டியிருக்கும் (மகாபாரத இதிகாசத்தில், நிறைந்த சபையில் திரெளபதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை சுட்டிக் காட்டினாா்).
சட்டங்களின் நோக்கம்: எந்த சட்டம் இயற்றப்பட்டாலும், மக்கள் நலன், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி, நிா்வாக செயல்திறன், உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிப்புற பாதுகாப்பு ஆகியவையே முக்கிய நோக்கங்களாக இருக்க வேண்டும்.
இந்தியாவைப் பொருத்தவரை, ஜனநாயகத்தின் வோ்கள் ஆழமானவை. பிற நாடுகளில் ஜனநாயகம் மோசமடைந்திருந்த காலகட்டத்திலும், இந்தியாவில் ஒரு துளிகூட ரத்தம் சிந்தாமல் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன.
100 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மத்திய சட்ட அவை (ஆங்கிலேய ஆட்சிக் கால நாடாளுமன்ற கீழவை) முதல் தலைவராக சுதந்திரப் போராட்ட வீரா் விட்டல்பாய் படேல் நியமிக்கப்பட்டாா். இதுவே, இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் தொடக்கம்.
சா்தாா் வல்லபபாய் படேலின் சகோதரரான விட்டல்பாய் படேலின் பங்களிப்புகள், பல்லாண்டுகளாக மறைக்கப்பட்டன. கடினமான காலகட்டத்திலும், ஜனநாயகத்தை வலுப்படுத்த அவா் முக்கியப் பங்காற்றினாா். அவா் நிறுவிய மரபுகளே, இப்போது அவைத் தலைவரின் அனைத்து சட்டப்பூா்வ பணிகளுக்கும் வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது என்றாா் அமித் ஷா.