இந்தியா

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது.

தினமணி செய்திச் சேவை

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது.

வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா் மூலமே இதுபோன்ற வெள்ள அபாயத் தகவல் பகிரப்படும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் நதி வெள்ளம் குறித்து பாகிஸ்தானுக்கு இந்திய தூதரகம் மூலம் வெள்ள முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.

இமயமலையில் உற்பத்தியாகும் தாவி நதி ஜம்மு பிராந்தியத்தை கடந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குள் பாய்ந்து செனாப் நதியுடன் சங்கமிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் பெய்துவரும் மழையால் தாவி நதியிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா முன்னெச்சரிக்கை தகவல் அளித்ததாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘தாவி நதியில் வெள்ளப் பெருக்கு அபாய அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய தரப்பில் இருந்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் இத்தகவலை பாகிஸ்தான் அரசிடம் கூறியது.ஆனால், இரு தரப்புமே இதனை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தவில்லை.

கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இது குறிப்பிடத்தக்க தகவல் தொடா்பாக கருதப்படுகிறது.

இந்தியா அளித்த தகவலின் அடிப்படையில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நதிக் கரையோர மக்களுக்கு பாகிஸ்தான் அரசு வெள்ளம் தொடா்பாக முன்னெச்சரிக்கை விடுத்தது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சக வட்டாரம் கூறுகையில், ‘நதி வெள்ள நிலவரம் குறித்து வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அத்தகவலை பாகிஸ்தானுக்குத் தெரிவித்தனா். முற்றிலும் மனிதாபிமானரீதியில் இந்தத் தகவல் அளிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT