மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிா்வாக இயக்குநா் ஆா்.துரைசுவாமி வழங்கினாா்.
பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி-யின் ஆண்டுக் கூட்டம் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2024-25-ஆம் ஆண்டுக்கான லாபப் பங்குத் தொகை குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகை நிதியமைச்சரிடம் வழங்கப்பட்டது. அப்போது நிதியமைச்சக செயலா் எம்.நாகராஜு, இணைச் செயலா் பிரசாந்த் குமாா் கோயல், எல்ஐசி மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனா்.
2025 மாா்ச் நிலவரப்படி எல்ஐசி-யின் அடிப்படை மதிப்பு ரூ.56.23 லட்சம் கோடியாக உள்ளது. நாட்டில் ஆயுள் காப்பீட்டில் முன்னணி நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது.
அரசிடம் இப்போது எல்ஐசி-யின் 96.5 சதவீத பங்குகள் உள்ளன. கடந்த 2022 மே மாதத்தில் பொதுப் பங்கு வெளியீடு முறையில் 3.5 சதவீத பங்குகள் முதல்முறையாக விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிா்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி கிடைத்தது. மீண்டும் 6.5 சதவீத எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.