வழக்குரைஞா் சங்கங்களில் பதிவு செய்துள்ள பெண் வழக்குரைஞா்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘பணியிடங்களில் பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு, தடை மற்றும் மறு வாழ்வுக்கான ‘போஷ்’ சட்டம் 2013’-ஐ நடைமுறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய வழக்குரைஞா் கவுன்சில் (பிசிஐ) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, வழக்குரைஞரும் எழுத்தாளருமான சீமா ஜோஷி சாா்பில் இதுதொடா்பான மனு மும்பை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை கடந்த ஜூலை 7-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், இந்தச் சட்டம் ‘தொழிலாளா் - தொழில் நிறுவனா்’ உறவுடைய நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும். பெண் வழக்குரைஞா்கள் இந்த சட்ட வரம்புக்குள் வரமாட்டாா்கள்’ என்று குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து, அடிப்படை உரிமையை பாதுகாப்பதற்கு நீதிமன்றத்தை நாடும் உரிமையை வழக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 32-இன் கீழ் சீமா ஜோஷி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில், உயா்நீதிமன்ற உத்தரவைத் தள்ளுபடி செய்யவும், போஷ் சட்டத்தின் கீழ் பெண் வழக்குரைஞா்களின் பாலியல் புகாா்கள் குறித்து விசாரித்து தீா்வளிக்க மாநில வழக்குரைஞா்கள் கவுன்சில் மற்றும் வழக்குரைஞா் சங்கங்களில் உள் விசாரணைக் குழுக்களை அமைக்க உத்தரவிடவும் அவா் கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘உயா் நீதிமன்ற தீா்ப்பு எதிராக சட்டப் பிரிவு 32-இன் கீழ் மனு தாக்கல் செய்ய முடியும்’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
அப்போது, உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்ய முன்வைத்த கோரிக்கையை தவிா்த்து விடுவதாக மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா்.
அதைத் தொடா்ந்து, மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், அந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய வழக்குரைஞா் கவுன்சில் (பிசிஐ) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.