"மக்களின் பணத்தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு விரும்பினார்; ஆனால் அவரது இத்திட்டம் வெற்றி பெற அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேல் அனுமதிக்கவில்லை' என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
சர்தார் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி குஜராத் மாநிலம் வதோதரா நகருக்கு அருகில் உள்ள சாத்லி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களிடையே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
அயோத்தியில் மக்களின் பணத்தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நேரு விரும்பினார். அவரது இத்திட்டத்தை குஜராத்தி தாயாருக்கு பிறந்த சர்தார் படேல்தான் எதிர்த்தார். மக்களின் பணத்தைக் கொண்டு பாபர் மசூதி கட்டப்படுவதை அவர் அனுமதிக்கவில்லை.
குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தைப் புதுப்பிக்க நேரு ஆட்சேபம் தெரிவித்தபோது "இந்தக் கோயில் விவகாரம் வேறுபட்டது' என்று படேல் தெளிவுபடுத்தினார். ஏனெனில், அக்கோயிலை புதுப்பிப்பதற்குத் தேவைப்பட்ட ரூ.30 லட்சத்தை மக்கள் நன்கொடையாக அளித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
சோமநாதர் ஆலயத்தைப் புதுப்பிக்க ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அக்கோயில் பணிக்கு அரசுக் கருவூலத்தில் இருந்து ஒரு பைசாகூட செலவழிக்கப்படவில்லை. அதேபோன்று அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு மத்திய அரசு ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. அக்கோயில் கட்டுவதற்கான முழுச் செலவையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டனர். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்.
சர்தார் படேல் இந்நாட்டின் பிரதமராக வந்திருக்க முடியும். ஆனால், அவர் தனது வாழ்நாளில் எந்தப் பதவிக்காகவும் ஏங்கியதில்லை. நேருவுடன் சித்தாந்த ரீதியிலான வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவருடன் படேல் இணைந்து செயல்பட்டார். அதற்கு மகாத்மா காந்திக்கு படேல் அளித்திருந்த வாக்குறுதிதான் காரணம்.
கடந்த 1946-இல் காங்கிரஸ் தலைவராக நேரு தேர்வு செய்யப்பட்டார். மகாத்மா காந்தியின் ஆலோசனைப்படி அப்பதவிக்கான போட்டியில் இருந்து படேல் விலகியதால்தான் இது சாத்தியமானது. அப்போது காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருந்தது. அப்பதவிக்கு பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்கள் படேலின் பெயரையே முன்மொழிந்தனர். எனினும், நேரு தலைவராவதற்கு வழிவிட்டு போட்டியில் இருந்து விலகுமாறு மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதும் படேல் அதைப் பின்பற்றி செயல்பட்டார்.
படேலின் பெயரையும் புகழையும் அழிக்க சில அரசியல் சக்திகள் விரும்பின. எனினும், வரலாற்றுப் பக்கங்களில் படேலை ஓர் ஒளிரும் நட்சத்திரமாக மிளிரச் செய்தது பிரதமர் நரேந்திர மோடிதான்.
படேல் மறைந்ததும் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்க மக்கள் நிதி வசூலித்தனர். இந்தத் தகவல் அப்போதைய பிரதமர் நேருவை எட்டியதும் "படேல் விவசாயிகளின் தலைவர். எனவே இந்த நிதியை அவரது கிராமத்தில் கிணறுகளும் சாலைகளும் அமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்' என்று அவர் ஆலோசனை கூறினார். இது என்ன அபத்தம்? கிணறுகளையும் சாலைகளையும் அமைப்பது அரசின் பொறுப்பு. படேல் நினைவிடத்துக்காக திரட்டப்பட்ட நிதியை இதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது கேலிக்கூத்தானது. படேலின் புகழ் பரவுவதை என்ன விலை கொடுத்தாவது ஒடுக்க வேண்டும் என்று அப்போதைய அரசு விரும்பியதையே இது காட்டுகிறது.
நேரு தனக்குத் தானே பாரத ரத்னா விருதை கொடுத்துக்கொண்டார். ஆனால் அப்போது படேலுக்கு பாரத ரத்னா என்ற கௌரவம் அளிக்கப்படாதது ஏன்? படேலுக்கு பிரம்மாண்டமான ஒற்றுமைச் சிலையை அமைத்து அவரை உரிய முறையில் கௌரவிக்க பிரதமர் மோடி முடிவு செய்தார். அது பெருமிதம் கொள்ளத்தக்க செயலாகும்.
படேலுக்கு மிகவும் வயதாகிவிட்டதால் அவர் பிரதமராக வர முடியவில்லை என்று கூறப்படுவது தவறானது. பிரதமராகப் பொறுப்பேற்றபோது மொரார்ஜி தேசாயின் வயது 80. அவர் அந்த வயதில் பிரதமராக முடியும் என்றால் 80 வயதுக்கும் கீழ் இருந்த படேல் ஏன் பிரதமராக வந்திருக்கக் கூடாது?
காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கும் விவகாரத்தில் படேல் எழுப்பிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்னையை இந்தியா சந்தித்திருக்காது என்றார் ராஜ்நாத் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.