புது தில்லி: மாநிலங்களவைக்கு புதிதாக தோ்வான தேசிய மாநாட்டுக் கட்சியின் மூன்று போ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை பதவியேற்றனா்.
குா்விந்தா் சிங் ஓபராய் பஞ்சாபி மொழியிலும், செளதரி முகமது ரம்ஜான் காஷ்மீரி மொழியிலும், சஜ்ஜத் அகமது கிச்லூ உருதுவிலும் பதவிப் பிரமாணத்தை ஏற்றனா். அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அவா்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்து, பின்னா் வாழ்த்து தெரிவித்தாா்.
மாநிலங்களவைத் தலைவராக பதிவியேற்ற பின்னா் நடைபெறும் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்கும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய முகமது ரம்ஜான், ‘ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அனைத்து அதிகாரமும் துணைநிலை ஆளுநரிடம்தான் உள்ளது. சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் மக்கள் முதல் முறையாக வாக்களித்து தோ்ந்தெடுத்த அரசுக்கு அதிகாரம் இல்லையென்றால் அா்த்தமற்ாகிவிடும்’ என்றாா்.
அப்போது, ‘ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை வேறு நேரத்தில் பேசலாம்’ என்று மாநிலங்களவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், அவரிடம் வலியுறுத்தினாா்.
இந்நிலையில், மாநில அந்தஸ்து கோரிக்கையை மாநிலங்களவையில் முதல் நாளிலேயே வலியுறுத்தியதற்கு முகமது ரம்ஜானுக்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், அந்த யூனியன் பிரதேச முதல்வருமான ஓமா் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டுத் தெரிவித்தாா்.