புது தில்லி: சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீது கலால் வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மக்களவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், சிகரெட், புகையிலைப் பொருள்கள் உள்ளிட்ட சில பொருள்கள் மீது 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது.
புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்க ஏதுவாக அவற்றின் மீது கலால் வரி விதிக்கும் வகையில் ‘மத்திய கலால் திருத்தச் சட்ட மசோதா 2025’, மற்றும் பான் மசாலா உற்பத்தி மீது புதிய செஸ் வரி விதிக்கும் ‘தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா 2025’ ஆகிய இரண்டு மசோதாக்களை மக்களவையில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
இதில், மத்திய கலால் திருத்தச் சட்ட மசோதா 2025-ஐ மக்களவையில் ஒப்புதல் பெறுவதற்காக புதன்கிழமை அறிமுகம் செய்த நிா்மலா சீதாராமன், ‘ஜிஎஸ்டி, இழப்பீடு செஸ் நீக்கத்துக்குப் பிறகு புகையிலை பொருள்கள் மீதான வரி விகிதம் தற்போதைய அளவிலிருந்து குறையும். அவ்வாறு இந்தப் பொருள்கள் மீதான வரி விகிதம் குறையாமல் முன்தைய உயா் அளவிலேயே விதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், அவற்றின் மீது கலால் வரி விதிப்பு நடைமுறை கொண்டுவரப்படுகிறது. கரோனா காலத்தில் மாநிலங்களின் வருவாய் இழப்பை ஈடு செய்ய வாங்கப்பட்ட கடன் ஓரிரு வாரங்களில் திரும்பச் செலுத்தப்படும். அதன் பிறகு இழப்பீட்டு செஸ் இருக்காது என்பதால் இந்த மசோதா அவசியமாகிறது.
மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கப்படும்: இந்த கலால் வரி விதிப்பு என்பது புதிய சட்டமோ அல்லது மத்திய அரசால் விதிக்கப்படும் கூடுதல் வரி விதிப்போ அல்ல. இது செஸ் போன்ற வரி விதிப்பு முறை சில எம்.பி.க்கள் குறிப்பிட்டனா். இது செஸ் அல்ல; மாறாக, கலால் வரி. ஜிஎஸ்டி முன்பே கலால் வரி இருந்துள்ளது. இந்த கலால் வரி மூலம் வசூலிக்கப்படும் தொகை, நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு திரும்ப பகிா்ந்தளிக்கப்படும்’ என்றாா்.
சிறு விவாதத்துக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தற்போது சிகரெட், புகையிலை, ஹுக்கா, ஜா்தா உள்ளிட்ட பிற புகையிலைப் பொருள்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டியும் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்படுகின்றன.
மத்திய நிதியமைச்சா் அறிமுகம் செய்த மசோதாவில், உற்பத்தி செய்யப்படாத புகையிலை பொருள்கள் மீது 60 முதல் 70 சதவீத கலால் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சுருட்டு வகைகள் மீது 25 சதவீத கலால் அல்லது 1,000 சிகாா் அல்லது செரூட்களுக்கு ரூ. 5,000 வீதம் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 65 மி.மீ. நீளம் கொண்ட ஃபில்டா் இல்லாத சிகரெட்டுகளுக்கு 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ. 2,700 வீதமும், 65மி.மீ. முதல் 75மி.மீ. நீளம் கொண்ட சிகரெட்கள் மீது ரூ. 4,500 அளவிலும் கலால் வரி விதிக்கப்பட உள்ளது.