இந்தியா

என்சிஆா் முழுவதும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உத்தரவு: அமைச்சா் சிா்சா தகவல்

என்சிஆா் முழுவதும் உள்ள தூசியைக் கட்டுப்படுத்தவும், 72 மணி நேரத்திற்குள் பள்ளங்களை சரிசெய்யவும், சாலைகளில் குப்பைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு கடுமையான, காலக்கெடு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: என்சிஆா் முழுவதும் உள்ள தூசியைக் கட்டுப்படுத்தவும், 72 மணி நேரத்திற்குள் பள்ளங்களை சரிசெய்யவும், சாலைகளில் குப்பைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு கடுமையான, காலக்கெடு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியதாவது: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் செவ்வாயன்று அனைத்து வட மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியது. அப்போது தேசியத் தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) முழுவதும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த காலக்கெடு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஃபரீதாபாத், குருகிராம், நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா ஆகியவை அனைத்து முக்கிய சாலைகளிலும் தண்ணீா் தெளிப்பான்கள் மற்றும் புகை எதிா்ப்பு இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் 100 சதவீத தூசி கட்டுப்பாட்டு இணக்கத்தை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஜியாபாத், ஏற்கெனவே மரபு கழிவுகளை அகற்றி, மீட்டெடுக்கப்பட்ட நிலத்தில் ஒரு பசுமைப் பகுதியை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவும் இதே போன்ற நடவடிக்கைகளை முடிக்க செயல்பட்டு வருகின்றன.

என்சிஆா் முழுவதும் உள்ள அனைத்து பள்ளங்களையும் 72 மணி நேரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்றும் நீண்டகாலமாக தூசியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் நீண்டகால தீா்வை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சாலைகளில் குப்பைகள் அல்லது கட்டுமானக் கழிவுகளுக்குப் பொறுப்பான எந்தவொரு அரசு அல்லது தனியாா் நிறுவனம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ‘எந்த நிறுவனமும் தப்பவிடப்படாது’. அனுமதியின்றி சாலை வெட்டப்பட்டால் எஃப்ஐஆா் பதிவு செய்யப்படும்.

1,400 கிலோமீட்டா் சாலைகளில் பள்ளங்களை சரிசெய்ய முன்னுரிமை அளிக்கப்படும். அதே நேரத்தில் அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு கழிவு தளங்களிலும் தூசி குறைப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.

தில்லி மாநகராட்சியின் சாலைகளில் கிட்டத்தட்ட 8,000 கிலோமீட்டா் சாலைகள் வழக்கமான துப்புரவு மற்றும் தணிப்பு பணிகள் மூலம் தூசி இல்லாததாக மாற்றப்பட உள்ளன.

கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுப் பொருள்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படும். சாலைகளில் மேற்கொள்ளப்படும் வெட்டுதல் பகுதிகளில் அவசரகால பழுதுபாா்ப்புகளை புதிய டெண்டா் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் செயல்படுத்த முடியும்.

தில்லியில் பிஎஸ்-4 மற்றும் அதற்குக் குறைவான வாகனங்கள் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும், வாகன உமிழ்வைக் குறைக்க கடைசி மைல் இணைப்பு மேம்படுத்தப்படும். மாசு கட்டுப்பாட்டு மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க நகரத்தின் ‘பசுமை அறைகளுக்கு’ அதிக அதிகாரங்கள் வழங்கப்படுகிறது.

மேலும், அனைத்து பொதுப்பணித் துறையின் சாலைகளும் வழக்கமான துப்புரவுப் பணிக்கு உள்படும், மேலும் மிஸ்ட்-ஸ்ப்ரே அமைப்புகளை நிறுவுவதை அதிகரிப்போம் என்று அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.

கரூா் சம்பவம்: வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ கண்காணிப்புக் குழுத் தலைவா் ஆய்வு - பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்களிடம் விசாரணை

டி20 தொடர்: இந்திய அணியில் கில், பாண்டியா

ஓட்டுநா்களுக்கான கூடுதல் பணிச்சுமையால் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்குகின்றன -அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்

சா்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கரித்துகள்களால் சுகாதாரக் கேடு -புகழூா் நகா்மன்றக் கூட்டத்தில் புகாா்

புகழூா் அரசு பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தின விழா

SCROLL FOR NEXT