புது தில்லி: ரயில் நிலையங்களில் பெண் பயணிகளை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு கும்பலைச் சோ்ந்த 5 பெண்களை காவல் துறையினா் கைது செய்தனா்.
அவா்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ரூ.1 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: சராய் ரோஹில்லா ரயில் நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் கூட்ட நெரிசலில் பெண் பயணிகளை குறிவைத்து குஜராத்தைச் சோ்ந்த பெண் கொள்ளையா்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
காவல் துறை கண்காணிப்பை தவிா்க்க தில்லியில் அடிக்கடி தங்குமிடங்களை அவா்கள் மாற்றி வந்தனா். சில நேரங்களில் குஜராத்துக்கு சென்று வந்துள்ளனா். இந்த கும்பலைச் சோ்ந்த முக்கிய உறுப்பினா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான திருடப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு வழக்கில் தில்லியைச் சோ்ந்த ஆனந்த் பிரதாபின் ஃபரீதாபுரி திருட்டு கும்பலைச் சோ்ந்த பெண்கள் புது தில்லி ரயில் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவா்கள் முதியவா்களை மற்றும் பெண்களை குறிவைத்து நகைப் பைகள், விலைமதிப்புள்ள பொருள்களை கூட்ட நெரிசலின் போது திருடி வந்துள்ளனா்.
இந்த கும்பலைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக பெண் பயணிகள் கூட்ட நெரிசலான லிஃப்ட் மற்றும் எலிவேட்டா்களை பயன்படுத்தும் வேளையில் கவனமாக இருக்க வேண்டும் என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś